வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின்

பேசாலை, தலைமன்னார் மீனவர்கள், தமிழக மீனவர்களுடன் தொடர்பு- கொரோனா பரவக் காரணமென்று குற்றச்சாட்டு

கடத்தல் செயற்பாடுகள் இருப்பதாகவும் கசுாதார அதிகாரிகள் கூறுகின்றனர்
பதிப்பு: 2021 ஜூன் 01 20:04
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 23:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணும் உள்ளூர் மீனவர்கள் சிலரினால் மன்னார் மாவட்டம் உட்பட முழு இலங்கையிலும் இலகுவாக கொவிட் - 19 நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென சுகாதார அதிகாரிகள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் கொவிட் -19 நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்திய மீனவர்களுடனான கடத்தல் சகவாசமே குறித்த மீனவர்களின் நோய் தொற்றுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
 
மன்னார் மாவட்டத்தின் பேசாலை மற்றும் தலைமன்னார் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்திய மீன்பிடிப் இழுவைப் படகுகள் மூலம் வர்த்தக நோக்கில் இலங்கைக்குள் ஏராளமான கடத்தல் பொருட்கள் எடுத்து வரப்படுகின்றது.

இவ்விதம் எடுத்து வரப்படும் கடத்தல் பண்டங்களை தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பில் இந்திய மீனவர்களிடம் இருந்து பொறுப்பேற்கும் இலங்கையர்கள் அக்கடத்தல் பண்டங்களைத் தமது படகுகளுக்கு இடமாற்றி மன்னார் மாவட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு எடுத்து வருகின்றனர்.

இவ்விதமான நடவடிக்கைகளினால் இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் நேரடியான தொடுகைக்கு உட்படுகின்றனர். இச்சந்தர்பத்தில் இந்தியர்களிடம் இருந்து கொவிட் தொற்று இலங்கையர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதென மேற்படி சுகாதார அதிகாரிகள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தனர்.

குறித்த கடத்தல் பொருட்கள் கொண்ட பொதிகள் எவ்வித தொற்று நீக்கமும் செய்யப்படாது இந்தியாவில் இருந்து ஒரு சில மணித்தியாலங்களில் மன்னார் மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களுக்கு எடுத்து வரப்படுவதினால் அதனைக் கையாள்வதினாலும் இலங்கையர்கள் கொவிட் தொற்றுக்கு இலகுவில் இலக்காகும் அபாயம் உள்ளதாகவும் இதன் மூலம் கொவிட் தொற்று மன்னார் மாவட்டம் முழுதும் வியாபிக்கும் அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தனர்.

இதைவேளை பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணி வருதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராதஜன் வினோதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைத் தொடர்சியாக பேணிவருகின்றனர். அத்துடன் இவர்கள் மூலம் மனித கடத்தல்களும் பொருட்கடத்தல்களும் இடம்பெறுவதாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பேராபத்தை விளைவிக்கும் இவ்விடயம் தொடர்பாக கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மன்னார் மாவட்ட கடற்பரப்பு ஊடாக நடைபெறும் பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல்கள் மூலம் நாட்டிற்குள் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதினால் இது தொடர்பான தகவல்களை சுகாதாரத் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் பொதுமக்கள் வழங்க முன்வரவேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.