வடமாகாணத்தைச் சேர்ந்த

தமிழர்கள் 24 பேர் தமிழ் நாட்டின் மதுரை நகரில் கைது

இங்கிலாந்து கனடா மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருந்ததாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஜூன் 12 23:43
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 13 20:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த 27 தமிழர்கள் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவின் தமிழ் நாட்டு மாநிலம் மதுரை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களில் இரண்டு பெண்கள் உட்பட ஒரு குழந்தை அடங்குவதாகவும் அவர்கள் இந்தியாவின் குடியகல்வுக் குடிவரவுச் சட்டங்களை மீறி கடவுச்சீட்டுகள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இந்தியா கியு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இந்தியா தமிழ் நாட்டின் மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களின் கியு பிரிவு பொலிஸார் இணைந்து மதுரை நகரில் கடந்த வெள்ளி மாலை மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போதே குறித்த 27 இலங்கைத் தமிழர்களும் கைதாகியுள்ளதாகத் தமிழக வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் தெரிவித்தன.

கைதாகிய இலங்கை தமிழர்கள் அனைவரும் தமிழகத்தின் ஊடாக இங்கிலாந்து கனடா மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காகவே இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும் கைதானவர்களில் பலரின் உறவினர்கள் மேற்படி நாடுகளில் வசிப்பதாகவும் கியு பிரிவு பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொவிட் நோய்த் தொற்றுக் காரணமாக இலங்கையில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த இலங்கையர்கள் படகு மூலமாக தமிழகம் வருகை தந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

அத்துடன் கைதான இலங்கையர்கள் அனைவரும் முகவர்களின் உதவியுடன் இலங்கையின் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து படகுகள் மூலம் கடல் வழியாக கடந்த மாதம் 27ஆம் திகதி தமிழகத்தின் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக வருகை தந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இவர்கள் மதுரை நகரில் தங்கியிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவேளையே தமிழகத்தின் கியு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கடந்த வெள்ளி மாலை கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கைதானவர்கள் அனைவரும் இந்தியா கேரளா மாநிலம் ஊடாக கனடா சென்று பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகக் கியு பிரிவு பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.