இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு திடீரென ஒத்திவைப்பு

உள்ளக எதிர்ப்புகளே காரணம் எனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2021 ஜூன் 15 22:15
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 15 23:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை புதன்கிழமை சந்திக்கவிருந்த நிலையில் அந்தச் சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெறாதெனவும் பிறிதொரு தினத்தில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என்றும் கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்துள்ளது. இதனை கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்தரன் ஊடகங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
 
சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவும் ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்படவில்லை. ஆனாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறிய கட்சிகளும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஏலவே முரண்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பாகச் செய்திகள் வெளியானதும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

பௌத்த குருமார் சிலரும் சந்திப்பை ரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதியை நாளை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று மாலை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இன்றுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவில்லை. அரசியல் தீர்வுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும், அனைத்துக் கட்சித் தலைவர்களோடும் உரையாடி இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதே தனது நோக்கமெனவும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார்.