கொவிட்-19 நோய்த் தாக்கம்

அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்படும் விசேட அனுமதிப் பத்திரங்கள் துஸ்பிரயோகம்- மன்னார் அரச அதிபர்

சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகிறார்
பதிப்பு: 2021 ஜூன் 16 20:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 08:47
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
கொவிட்- 19 நோய் பரவல் காரணமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்ட செயலகம் மூலம் வழங்கப்படும் விஷேட பாஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளும் சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பொலிஸாரினால் தனக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கையில் வேகமாகப் பரவும் கொவிட்- 19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தீவு முழுதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இறுக்கமான நடைமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
 
இந்த நிலையில் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காக வர்த்தகர்களுக்கும் மற்றும் உறவினர்களின் இறப்பு உட்பட தவிர்க்க முடியாத பல தேவைகளுக்காகவும் வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் விஷேட பாஸ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் மேற்படி காரணங்களைச் சுட்டிக்காட்டி தம்மிடம் பாஸ் அனுமதி பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஓரிருவர் குறித்த பாஸ் அனுமதியை துஸ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகத் தான் விசனம் அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் மேற்படி பாஸ் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரத்தியேகமாக அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் உட்பட பொது மக்களின் தவிர்க்க முடியாத அதி முக்கிய காரணங்களுக்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்பவர்கள், கிராமசேவையாளர்கள் பிரதேச செயலாளர்களின் சிபார்சுடன் தமது விண்ணப்பங்களை மாவட்ட செயலகத்தில் சமர்பிக்கும் நிலையில் அதனை பரிசீலனை செய்யும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அதற்கான விஷேட பாஸ் அனுமதியை உரியவர்களுக்கு வழங்கி வருகின்றார்.

கொவிட் தொற்றினால் முழு நாடும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்களின் நலன் கருதி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயலக ஊழியர்களின் அர்பணிப்புடன் மேற்படி பாஸ் நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்படுகிறது

இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாஸ் அனுமதியைப் பெற்றுச் செல்லும் சிலர் தங்கள் பயண அனுமதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பகுதியில் இலகு ரக டிரக் வாகனத்தில் பெருந்தொகை கஞ்சாவினை எடுத்துச் சென்ற நபரொருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் தாராபுரம் பிருந்தாவனம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர் கோழி இறைச்சி வகைகளை மன்னார் மாவட்டத்திற்கு எடுத்து வருவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விஷேட பாஸ் அனுமதியை பெற்றுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பாஸ் அனுமதியை பயன்படுத்தி மன்னாரில் இருந்து வாகனமொன்றில் கஞ்சாவினை ஆனமடுவிற்கு கடத்திய வேளையே மேற்படி நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மன்னார் மாவட்டத்தில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காகப் பாஸ் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு பாஸ் அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஏலவே பாஸ் அனுமதியைப் பெற்றவர்களின் காலாவதியான பயண அனுமதிகள் தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் இருந்து பாஸ் அனுமதி பெற்று வெளிமாவட்டங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் இலங்கை இராணுவத்தினராலும் பொலிஸாரினாலும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.