வடமாகாணத்தில் உள்ள

கடற்பரப்பில் பழைய வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காகவே என்கிறது நீரியல் வளத்துறை அமைச்சு
பதிப்பு: 2021 ஜூன் 18 19:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 01:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இந்தியா இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்பரப்பில் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனைக் கண்டித்தும் இவ்விடயத்தில் இந்தியா மத்திய அரசாங்கம் நேரடியாக தலையீடு செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தும் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இராமேஸ்வரம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற மேற்படிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் அதன் அருகில் உள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்ந பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
 
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறைக் கடல் பகுதியில் பாவனைக்கு உதவாத பழைய பேருந்துகள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் கடலுக்குள் அமிழ்த்தப்பட்டது.

வட மாகாண கடலில் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக கடல் நீரடிப் பாறைகளுக்கு நிகரான சூழ்நிலையைச் செயற்கையான முறையில் உருவாக்கும் நோக்கிலேயே இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் அங்கீகாரத்துடன் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களம் மேற்படி பழைய பேருந்துகளை காங்கேசன்துறை கடலுக்குள் இறக்கியது.

இலங்கை கடற்றொழில் அமைச்சு கடல் வாழ் உயிரினத்தின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட பழைய பஸ் வண்டிகளை கடலுக்குள் இறக்கும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்றொழில் அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து மேற்படி வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடலிலும் பழைய பேருந்துகள் இறக்கப்பட்டன.

இந்த நிலையில் இலங்கை கடற்றொழில் அமைச்சின் மேற்படி செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தே இந்தியா இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த புதனன்று தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இச்சூழ்நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா மீனவர்கள் குற்றம் சுமத்தினர். மேலும் பழைய பேருந்துகளை கடலில் இறக்குவதால் கடல் மாசுபடும் அபாயம் உள்ளதாகவும் இந்தியா மீனவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் இந்தியா எல்லையில் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அவர்களினால் இந்தியா கடற்பரப்பில் விரிக்கப்படும் வலைகள் காற்றின் திசை மற்றும் கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லக் கூடிய நிலையில் பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான தமது வலைகளுக்கு கடலில் அமிழ்த்தப்பட்ட பழைய பஸ்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய பேருந்துகளை ஆழ் கடலில் இறக்கும் நடவடிக்கைகளை இலங்கை கடற்றொழில் அமைச்சு உடன் நிறுத்தவேண்டும் எனவும் இலங்கை அரசின் மேற்படி செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்தியா மத்திய அரசாங்கம் நேரடியாக களத்தில் இறங்கி தாம் ஆண்டாண்டு காலமாக மேற்கொண்ட மீன்பிடித் தொழிலை பாதுகாக்கவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகம் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மீன் வளத்தை அதிகரிப்பதற்கு பழைய பஸ் வண்டிகள் மட்டுமின்றி பழைய ரயில் பெட்டிகளும் இலங்கை கடற்பரப்பின் பல பகுதிகளிலும விரைவில் அமிழ்த்தப்படும் என இலங்கை கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடலில் மீன் வளத்தை அதிகரிப்பதற்கு பல உலக நாடுகள் பழைய பேருந்துகளையும் பழைய கார்களையும் தங்கள் நாட்டு கடலில் இறக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் கூட மீன் வளத்தை பெருக்குவதற்கு இவ்விதம் பழைய வாகனங்களைக் கடலில் இறக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மீன் வளத்தை அதிகரிப்பதற்காக பழைய வாகனங்களை கடலில் அமிழ்த்தும் நடவடிக்கைகள் தொடர்பில் கடல் சார் வல்லுனர்கள் மற்றும் புத்தி ஜீவிகளிடம் உரிய அறிவுறுத்தல்கள் பெறப்பட்டதாகவும் இலங்கையின் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் நகரில் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.