இலங்கை ஒற்றையாட்சி அரசினால்

13 ஆவது திருத்தச் சட்டத்திற்குரிய அதிகாரங்கள் மீள பெறப்படுகின்றன

மாகாண சபையை வெற்றுப் பொருளாக்குவதே நோக்கமென்கிறார் சிவசக்தி ஆனந்தன்
பதிப்பு: 2021 ஜூன் 18 21:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 01:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
பல்லாயிரக்கணக்கான உயிர் தியாகத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஆட்சிக்கு வரும் இலங்கை சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் தற்பொழுது மாகாண சபைகளுக்கு உள்ள கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளின் அதிகாரங் களையும் பறித்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்ப தாகத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ. சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் கடந்த 14ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாணத்தில் உள்ள மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் உட்பட ஒன்பது பொது வைத்தியசாலைகளை இலங்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சின் பொறுப்பின் கீழ் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில இது குறித்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாகாண சபைகளின் அதிகாரங்கள் அனைத்தையும் பிடுங்கி அதனை வெற்றுப் பொருளாக்குவதே இலங்கை அரசின் திட்டமாகும். அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இதனை நன்கு புலப்படுத்துகிறது.

தமிழின விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இளைஞர் யுவதிகளின் உயிர்த் தியாகத்தினால் உருவானதே இந்திய இலங்கை ஒப்பந்தமும் அதன் பிரகாரம் உருவான 13ஆம் திருத்தச் சட்டமும் அதன் அடிப்படையிலான மாகாண சபை முறையுமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்காக இணைந்த வடகிழக்கு மாகாண சபையும் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சியால் வடகிழக்கு மாகாண சபை எனும் தனிப்பெரும் நிருவாகம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் நிருவாகம் என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் மாகாண சபைக்களுக்கே உரித்தான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கும், மத்தியில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தொடர்சியாக மறுத்து வந்தன.

காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் இலங்கைக்குள் பிறிதொரு தனிநாடு உருவாகிவிடும் எனவும் அது தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் எனவும் சிங்கள ஆட்சியாளர்கள் பெரும் பீதியடைந்தனர்.

மேலும் தற்போதைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும் ஒரே நாடு ஒரே சட்டம் எனும் சிந்தாந்தத்தை அமுலாக்கி 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக துடைத்தெறிவதற்கு கங்கணங்கட்டிக் கொண்டிருக்கின்றனர். எனினும் பிராந்திய வல்லரசு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளின் நெருக்கடியினால் தமது கைங்காரியத்தை தற்போதைய ஆட்சியாளர்களினால் செயல்படுத்த முடியாதுள்ளது.

இதன் அடிப்படையிலேயே 13ம் திருத்தச் சட்டத்தை காலாவதியான சட்டம் என விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அத்துடன் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்கின்றனர்.

இதன் முதற்கட்ட நகர்வே தற்போது மாகாண சபைகளின் கைகளில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆகும். மேலும் இனி வரும் நாட்களில் மாகாணப் பாடசாலைகளைத் தேசிய பாடசாலையாகத் தரம் உயர்த்துவது எனும் போர்வையில் மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான திரை மறைவு நடவடிக்கைகளும் விரைவாக ஆரம்பிக்கப்படும்.

மேலும் கொரோனா நெருக்கடி இணையவழிக் கல்வி போன்ற விடயங்களை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு முன்வராத ஆட்சியாளர்கள் சுகாதாரம் கல்வி ஆகிய விடயங்களில் மாகாண சபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களைப் பிடுங்கிவிட்டால் மாகாண சபைகள் நிருவாகம் வெற்றுப் பொருளாகிவிடும். அதன் பின்னர் மாகாண சபைகளில் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் போய்விடும்.

அவ்வாறு மாகாண சபை முறையினால் பயன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டாலும் ஆளுநர் மற்றும் அரச உயர் மட்டத்தினரைக் கொண்டு அதனைச் சமாளித்துக் கொள்ளலாம் என்றே தற்போதைய ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வகையான தீய எண்ணங்களுக்கு மத்தியிலேயே மூன்று ஆண்டுகள் கடந்தும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்கின்றது.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முஷ்தீபுகளும் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் மாகாண சபைகள் எவ்வித அதிகாரங்களும் இன்றி வெறுமனே இருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை முறையினால் எவ்வித பயனும் இல்லை எனக்கூறி 13ஆம் திருத்தச் சட்டத்தையே முழுமையாக அகற்றுவதே அரசின் திட்டமாகவுள்ளது.

எனவே இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரும் அதிக அக்கறை எடுத்தல்வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளருமான அ.சிவசக்தி ஆனந்தன் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.