ராஜபக்ச அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தித் தற்போது முரண்பட்டுள்ள

முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கோட்டாபய அழைப்பு

விமல் வீரவன்சவுடன் பசில் ராஜபக்ச கலந்துரையாடல்
பதிப்பு: 2021 ஜூலை 03 22:21
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 23:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதற்குப் பெரும் பங்காற்றித் தற்போது அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் கொழும்பு அபயராம விகாராதிபதி முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். கோட்டாபய ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்து வந்த நிலையிலேயே இந்த அழைப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு நேரடியாக விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
 
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க முன்னர் முத்தெட்டுவே ஆனந்த தேரரை நேரடியாகச் சந்தித்து ஆசி பெற்றிருந்தார். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் பெரும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதா இல்லையா என்று முத்துட்டுவே ஆனந்த தேரர் இன்றிரவு வரை ஊடகங்களுக்கு எதுவுமே கூறவில்லை.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் போது பல நெருக்குதல்களுக்கு மத்தியிலும் மகிந்த ராஜபக்சவுக்கு அரசியல் செய்ய முத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது விகாரைக்குள் அனுமதியளித்திருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இதுவரை நாளும் முரண்பட்டுக் கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுடன், அமைச்சராகப் பதவியேற்கவுள்ள ராஜபக்ச சகோதரர்களின் முக்கியமானவரான பசில் ராஜபக்ச இன்று கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகப் பேசப்பட்டதென்றும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்குக் கூட்டுக் கட்சிகள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு எதுவுமே கூறப்படவில்லை. மற்றுமொரு அமைச்சரான உதயன்கம்பிலவையும் பசில் ராஜபக்ச சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் முக்கிய பொறுப்புள்ள அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனத் தகவல்கள் கூறுகின்றன.