இலங்கை ஒற்றையாட்சி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள

வட மாகாண சபையின் தலைமைச் செயலாளர் பதவிக்குப் போட்டி

உயர் அதிகாரிகள் சிலர் அரசியல்வாதிகளின் ஆதரவை நாடுவதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2021 ஜூலை 05 21:46
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 06 03:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாண சபையின் தலைமைச் செயலாளர் அந்தோணிப்பிள்ளை பத்திநாதன் தனது சேவையில் இருந்து இன்று திங்கள் கிழமை 5ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் குறித்த தலைமைச் செயலாளர் பதவியைக் குறி வைத்து வட மாகாணத்தில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ள இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதுடன் அப்பதவியை பெறும் நோக்கில் அவர்கள் அரசியல்வாதிகள் ஊடாக கடும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வட மாகாண சபை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் தெரிவித்தன.
 
வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அந்தோணிப்பிள்ளை பத்திநாதன் இன்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய பிரதமச் செயலாளராக தமக்கு சாதகமான அதிகாரி ஒருவரை நியமனம் செய்வது தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இரண்டு தமிழ் அரசியல் பிரமுகர்களும் காய்களை நகர்த்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதிஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். இளங்கோவன் மற்றும் கடந்த 2013ஆம் ஆண்டுப் பகுதியில் வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்த திருமதி விஐயலட்சுமி ரமேஸ், இலங்கை உணவுத் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி ஜே. கிருஷ்ணமூர்த்தி, உட்பட வட மாகாண சபை பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் க.தெய்வேந்திரம் ஆகிய ஐவரின் பெயர்கள் வட மாகாண சபையின் தலைமை செயலாளர் பதவிக்காக அரச உயர் மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் தரப்பைச் சேர்ந்த மேற்படி இரண்டு தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களும் மேற்படி ஐவரில் தமக்கு வேண்டிய ஒருவரைத் தலைமைச் செயலாளராக நியமிக்கும்படி அரச உயர் பீடத்திற்கு சிபார்சு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக ஏ. பத்திநாதன் தொடர்ந்தும் பணியாற்றுவதற்காக அவருக்கு ஒரு வருட சேவை நீடிப்பு வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளபடுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ், தலைமைச் செயலாளராக அ.பத்திநாதன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான சேவை நீடிப்பை பெறுவதற்கு அரசிற்கு உரிய பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் வட மாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது பணியாற்றும் இலங்கை நிருவாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான திருமதி எஸ். மோகநாதன் மற்றும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன் ஆகியோர்களும் வட மாகாண சபையின் தலைமைச் செயலாளர் பதவிக்கு ஏற்ற தகுதி வாய்ந்த அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பாலைக்குழியைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பத்திநாதன் முசலி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும் நானாட்டான் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் மன்னார் மாவட்ட புனர்வாழ்வு திட்டப் பணிப்பாளராகவும் முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் அரசாங்க அதிபராகவும் பணியாற்றிய நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தனது அரச சேவையில் இருந்து இளைப்பாறியுள்ளார்.