வடக்குக் கிழக்கு ஈழத்தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று கூறுகின்ற

அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை தொடர்பாக ராஜபக்ச அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையெனக் குற்றச்சாட்டு

இஸ்ரேல் எப்படித் தனிநாடாகியது என்று உதாரணம் வேறு கூறினார் லக்ஸ்மன் கிரியெல்ல
பதிப்பு: 2021 ஜூலை 06 23:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 07 00:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசம் தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை அரசாங்கம் சாதாரண விடயமாகக் கருதக்கூடாதென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இஸ்ரேல் எப்படி தனி நாடாகியது என்ற வரலாற்றைச் சுட்டிக்காட்டிய லக்ஸ்மன் கிரியெல்ல, அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாகக் கவனம் செலுத்தி அதனை ரத்துச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
 
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய லக்ஸ்மன் கிரியெல்ல, போரின் பின்னரான அரசியல் சூழலை இந்த அரசாங்கம் இலகுவாக கையாண்டு விடலாமெனக் கருதுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டு நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைக் கூட அரசாங்கம் கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து தற்போது சர்வதேச நாடுகளோடு அரசாங்கம் பகைத்துக் கொண்டுள்ளதெனவும் இத்தகையதொரு சூழலில், அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை இலங்கை எதிர்கொள்வது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பினார்.

இலங்கைத் தீவின் மூத்த அரசியல்வாதியான லக்ஸ்மன் கிரியெல்ல ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை உருவாக்கியவர். 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

இதேவேளை, அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லையென்றும், வெறுமனே அமெரிக்காவின் புவிசார் அரசியல் தேவைக்காகச் சிங்கள ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் நோக்கம் மாத்திரமே என்று அவதானிகள் கூறுகின்றனர்.