வடமாகாணம்

மன்னாரில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கே முன்னுரிமை
பதிப்பு: 2021 ஜூலை 09 22:10
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 10 01:23
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
மன்னார் நகரப் பகுதிகளில் வதியும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்- 19 தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த திங்கட் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்திற்கு 5000 எண்ணிக்கையான சினோஃபார்ம் தடுப்பு ஊசிகள் எடுத்துவரப்பட்ட நிலையிலேயே மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த ஊசிகள் செலுத்தப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தில் மடு, முருங்கன், முசலி மற்றும் நானாட்டான் பிரதேசங்களின் மாவட்ட வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கடந்த செவ்வாய் தொடக்கம் குறித்த சினோஃபார்ம் தடுப்பு ஊசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மன்னார் அரசாங்க அதிபர் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அபாயம் உடைய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பகுதியில் உள்ள ஐந்து கிராமசேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கு சுமார் 20000 பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வெள்ளிக்கிழமை தலைமன்னார் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குறித்த பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சனிக்கிழமை 10 ஆம் திகதி தொடக்கம் வங்காலை பேசாலை, சிலாவத்துறை மற்றும் அரிப்பு ஆகிய கரையோரப் பகுதிகளிலும் பைசர் கொரொனா தடுப்பு ஊசிகளைப் பொதுமக்களுக்கு ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் மேலும் தெரிவித்தார்

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் முதல் சுற்றுக்குத் தேவையான கொவிட் தடுப்பு ஊசிகளைக் கொழும்பில் இருந்து விரைவில் தருவிப்பதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் மன்னார் மாவட்ட சுகாதார வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.