பசில் ராஜபக்ச நிதியமைச்சராகப் பதவியேற்ற அதே நாளில் குருநாகல்

பண்டுவஸ்நுவர பிரதேச சபையை இழந்தது ராஜபக்ச அரசாங்கம்

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரேரித்த வேட்பாளர் தவிசாளராகத் தெரிவு
பதிப்பு: 2021 ஜூலை 09 23:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 10 00:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
குருநாகல் பண்டுவஸ்நுவர பிரதேச சபையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றினாலும் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் செல்வாக்குக் குறைந்து விடாதென அமைச்சர் ஜென்ஸ்ரன் பெர்னான்டோ கூறியுள்ளார். பண்டுவஸ்நுவர பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கைமாறியதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் குருநாகல் மாவட்ட உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
 
இதன்போதே அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்னான்டோ இவ்வாறு கூறியதாக அறிய முடிகின்றது. பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்ற அதே நாளில் நேற்று வியாழக்கிழமை குருநாகல் மாவட்டத்தில் உள்ள பண்டுவஸ்நுவர பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியிருந்தது.

பொதுஜன பெரமுன கட்சியால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்மொழியப்பட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தப் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு 16 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளருக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் பொதுஜன பெரமுன சார்பில் 18 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 11 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் 7 பேரும் ஜே.வி.பியின் சார்பில் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று வியாழக் கிழமை இரவு பிரபல வர்த்தகர் ஒருவரின் இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.

குறித்த வர்த்தகரின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரத்துடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.