வடமாகாணம்

யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றுக்கு இதுவரை 107 பேர் பலி

அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு- இதுவரை 5749 பேர் பாதிப்பு எனவும் கூறுகிறார்
பதிப்பு: 2021 ஜூலை 10 14:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 10 17:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையின் வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிற் -19 நோய்த் தொற்றினால் முதல் மரணம் சம்பவித்த நாளில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஏழாம் திகதி வரை 107 பேர் மரணித்துள்ளதாகவும் குடா நாட்டில் யாழ் நகர பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கொவிட் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்று தற்போது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் தொற்றுக் காரணமாக ஊர்காவற்துறைப் பிரதேசத்தின் ஒரு பகுதி கடந்த இரண்டாம் திகதி தனிமைபடுத்தப்பட்டதின் பின் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் எப்பகுதியும் தனிமைபடுத்தப்படவில்லை என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

எனினும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வைத்தியர் அதிகாரிகள் பிரிவுகளிலும் கொவிட் நோய் தொற்று பரவலுக்கு எதிரான சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தினால் யாழ் குடாவில் உள்ள பொது மக்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை வரை கொவிட் தொற்று காரணமாக 5161 குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குரிய உலர் உணவு விநியோகம் உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பிரதேச செயலங்களினால் கிராமசேவையாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும் யாழ் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 5749 பேர் கொவிட் - 19 நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 4927 பேர்கள் சிகிச்சையின் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.