வடமாகாணம்

மன்னாரில் கத்தோலிக்க ஆலயங்கள் மீது கல்வீச்சு

விசாரணைகள் ஆரம்பம். பிரதேச மக்கள் கவலை தெரிவிப்பு
பதிப்பு: 2021 ஜூலை 14 21:02
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 15 00:19
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் நகரில் கடந்த மூன்று நாட்களில் ஆறு கத்தோலிக்கச் சிற்றாலயங்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவை சேதமாக்கப்பட்டுள்ளது தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் நகரில் உள்ள குறித்த ஆறு சிற்றாலயங்கள் மீது கடந்த திங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய தினங்களில் அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த கல் வீச்சினால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கவசங்கள் உடைந்து நொறுங்கியுள்ளதுடன் வேறு சிறிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மன்னார் நகரில் சின்னக்கடை, பெற்றா, பள்ளிமுனை, சாவற்காடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஆறு சிற்றாலயங்களே இவ்விதம் விஷமிகளால் கல் வீச்சு மூலம் சேதமாக்கபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக மூன்று தினங்கள் குறித்த ஆறு கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது விஷமிகளினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், மன்னார் கத்தோலிக்க மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிற்றாலயங்கள் மீதான கல் வீச்சுத் தாக்குதல்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் தடவியல் பிரிவினரின் உதவியுடன் மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இச்சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்க சிற்றாலயங்கள் தாக்கப்படுவதுடன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் உள்ள சிலைகளும் அடித்து நொருக்கப்படும் 20ற்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை குறித்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரேனும் பொலிஸாரினால் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் - மன்னார் மதவாச்சி-மன்னார் ஆகிய பிரதான வீதிகளின் அருகே அமைக்கப்பட்ட இந்து கோயில்களும் கத்தோலிக்க சிற்றாலயங்களுமே கடந்த காலங்களில் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை மன்னார் நகரில் அமைந்துள்ள ஆறு சிற்றாலயங்கள் விஷமிகளால் தாக்கப்பட்டமை தொடர்பாகக் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என மன்னார் மாவட்ட கத்தோலிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.