மலையகப் பிரதேசமான டயமகவைச் சேர்ந்த

தமிழ் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்ய விசேட குழு நியமனம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம்
பதிப்பு: 2021 ஜூலை 22 23:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 14:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணியாற்றிய மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய சிறப்புக் குழுவொன்று இன்று வியாழக் கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இந்தக் குழுவை நியமித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் திலீப பீரிஸ் தலைமையிலான குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளார்.
 
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரைச் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இந்த குழுவை நியமித்துள்ளார்.

இந்தக் குழு பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பாகவும் மற்றும் பிரத்தியேகத் தகவல்கள் பற்றியும் சட்டமா அதிபருக்கு அறிவிக்கும். டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பணிப்பெண்ணாகக் கடமையாற்றியுள்ளர்.

சென்ற 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமி உள்ளாகியிருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி சட்டத்தரணி ஊடாகப் பொலிஸாரிடம் இன்று வியாழக்கிழமை மாலை முன்னிலையாகியுள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. பொரளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.