வடமாகாணம்

மன்னாரில் தடுப்பூசிகளை பெற இளைஞர்கள் பின்னடிப்பு

பிராந்திய வைத்திய அதிகாரி கூறுகிறார்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 01 22:22
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 23:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் -19 ற்கான பைசர் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சமயம் மாவட்டத்தில் வதியும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் சுமார் 25 சதவீதமானோர் குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான வைத்திய அதிகாரி டொக்டர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தில் வதியும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் மாவட்டத்தில் உள்ள 5 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டது. இச்சமயம் மன்னார் மாவட்டத்தில் உள்ள குறித்த ஐந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நிரந்தரமாக வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதமானோர் குறித்த பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வருகை தரவில்லை என பிரதேச செயலகங்கள் மூலம் தமக்கு கிடைக்கப்பெற்ற தரவுகள் மற்றும் பதிவுகள் மூலம் தெரியவந்ததாக வைத்திய அதிகாரி டொக்டர் கதிர்காமநாதன் சுதாகர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் -19 ற்கான பைசர் தடுப்பூசிகள் பல பிராயத்தனத்திற்கு மத்தியிலேயே மன்னார் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் உட்பட பல இடங்களில் டெல்டா இரட்டைப் பிறழ்வு கொவிட் தொற்று கண்டறியப்பட்டது. அத்துடன் கடந்த ஏப்பிரல் மாதம் முற்பகுதியில் குறித்த இரட்டைப் பிறழ்வு கொவிட் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரும் முயற்சிகளுக்கு மத்தியில் மன்னார் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்ட பைசர் தடுப்பூசிகளை மன்னார் மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட 25 வீதமானோர் பெற்றுக்கொள்ளாதது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜனும் நானும் இணைந்து திட்டமுன்மொழிவொன்றினை தயாரித்தோம். குறித்த திட்டமுன்மொழிவில் மன்னார் மாவட்டம் இந்தியாவிற்கு மிக அருகில் காணப்படுவதையும் இப்பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் மிக இலகுவாக தொடர்புபடும் அபாய நிலை உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். அத்துடன் மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளை மையமாக வைத்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல சட்டவிரோத செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதையும் அதில் தெரிவித்திருந்தோம்.

இதன் அடிப்படையில் இந்தியாவில் பரவும் இரட்டை பிறழ்வு கொவிட் தொற்று மன்னார் மாவட்டத்திற்கு மிக வேகமாகப் பரவி முழு நாடும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதை அதில் சுட்டிக்காட்டினோம். இத்தகைய நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு பைசர் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் எமது திட்டமுன்மொழிவில் சுட்டிக்காட்டினோம்" என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான வைத்திய அதிகாரி கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

எம்மால் தயாரிக்கப்பட்ட குறித்த திட்டமுன்மொழிவை சுகாதார அமைச்சு, இலங்கை கொவிட் -19 செயலணி மற்றும் இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு ஆகியவற்றுக்கு சமர்பித்தோம். அத்துடன் இது தொடர்பாக நாம் இரண்டொரு தடவைகள் கொழும்பு சென்று மன்னாரின் அபாயநிலையைக் கருத்தில் கொண்டு எம்மால் சமர்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவிற்கு அமைய முதற்கட்டமாக மன்னார் மாவட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் 10 ஆயிரம் பைசர் தடுப்பூசிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தோம்.

இவ்வாறான நிலையில் எமது கோரிக்கையை ஏற்று மன்னார் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 20004 பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 22236 ம் மூன்றாம் கட்டமாக 5000ம் என பைசர் தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது என வைத்திய அதிகாரி கதிர்காமநாதன் சுதாகர் மேலும் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை வரை சுமார் 46 ஆயிரத்தி 920 பேர்களுக்கு கொவிட் - 19ற்கான பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதிவரை 982 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒன்பது கொவிட் நோயாளிகள் மரணித்துள்ளதாகவும் மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவிற்கான வைத்திய அதிகாரி டொக்டர் கதிர்காமநாதன் சுதாகர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.