வடமாகாணம்

மன்னாரில் கொவிட் தொற்றால் பெண் ஒருவர் மரணம்

மாவட்டத்தில் இதுவரை பத்துப்பேர் உயிரிழப்பு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 03 20:38
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 00:38
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை கொவிட்- 19 நோய்த் தொற்றினால் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இதனால் மன்னார் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார். கொவிட் தொற்றினால் பீடிக்கப்பட்ட களுத்துறையைச் சேர்ந்த குறித்த பெண் மன்னார் தாராபுரம் துருக்கி சிட்டி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கள் இரவு இவர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே செவ்வாய் காலை இவர் மரணமடைந்ததாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜன் வினோதன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி ஆர் மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளில் 120 பேர் கொரோனா நோய்த் தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 61 பேர்கள் மன்னார் தாழ்வுபாட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அத்துடன் இவர்கள் மன்னார் தோட்டவெளிப் பகுதியில் உள்ள மீன் பதனிடும் நிலையமொன்றில் பணிபுரிந்தவர்கள். மேலும் இவர்களில் 12 பேர்கள் எழுத்தூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும் 4 பேர்கள் பேசாலையை சேர்ந்தவர்கள் என வைத்தியர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணி இவ்வார இறுதியில் இடம்பெறும் எனவும் மன்னார் மாவட்டத்தில் பொதுமக்களில் அநேகர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமையினால் அவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் தற்போது தளர்வு நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மாவட்ட மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் தமது சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தர்மராஜன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழர் தாயகமான வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் 41 கொரோனா நோய்த் தொற்றாளர்கள் கடந்த திங்கள் இரவு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேற்படி 41 கொவிட் தொற்றாளர்களில் 10 பேர்கள் வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எனவும் 15 தொற்றாளர்கள் நேரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.