இலங்கைத் தீவில்

அதிகரிக்கும் கொவிட் தொற்று- இன்று 2543 புதிய தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை வரை 137 மரணங்கள்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 04 22:13
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 05 02:24
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையில் அதி தீவிரமாக கொவிட்-19 நோய்த்தொற்று பரவிவரும் நிலையில் கடந்த சில தினங்களாக நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளது. இன்று புதன்கிழமை 2543 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதியும் கொவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறான நிலையில் இன்று புதன்கிழமை இலங்கை பாராளுமன்றில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் -19 நோய் தொற்று இலங்கையில் வேகமாக பரவிவருவது தொடர்பில் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் தேவை ஏற்படின் முழு நாடும் மீண்டும் முழுமையாக முடக்கப்படும் என இலங்கை ஒற்றையாட்சியின் அரசின் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை கூடிய இலங்கை பாராளுமன்ற அமர்வில் இலங்கையில் அதி வேகமாக பரவிவரும் கொவிட் நோய்த்தொற்று மற்றும் கொவிட் மரணங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

அத்துடன் நாட்டின் தற்போது கொவிட் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது தொடர்பில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினர். இதன்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை தற்போது நாட்டில் நிலவிவரும் கொரொனா நோய்த்தொற்று தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானத்தைச் செலுத்தி வருவதாகவும் தேவை ஏற்படின் நாடு முழுமையாக முடக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக சடுதியாக அதிகரித்த நிலையில் கொழும்பு உட்பட இலங்கையின் முக்கிய பெரும் நகரங்களின் வைத்தியசாலைகள் உள்ள கொவிட் சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நிலையில் தென்னிலங்கையில் உள்ள காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையும் இரத்தினபுரி மாவட்ட பொது வைத்தியசாலையும் அவசர நிலையைப் (Red Alert) பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேற்படி வைத்தியசாலைகளின் நிருவாகம் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அவசர நிலை தொடர்பில் எழுத்து மூலம் அறிவுறுத்தல்களை வழங்கி அவர்களை தயார் நிலையில் இருக்குமாறு பணித்துள்ளதாகத் தகவல் அறிந்த தென்னிலங்கை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தன.

இதேவேளை இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் மரணங்கள் அதிகரித்து வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர் மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் என இரண்டு வயோதிபர்கள் கொரோனா நோய் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்றால் இன்று புதன்கிழமை வரை 137 மரணங்கள் சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேசமயம் வட மாகாணத்தில் தினமும் கொவிட் தொற்றுடன் பலர் அடையாளம் காணப்படும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள இரண்டு கொவிட் சிகிச்சைப் பிரிவுகள்(கொரோனா வார்ட்) கொவிட் நோயாளர்களால் நிரம்பிக் காணப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவாநந்தராஜா கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் செயல்படும் கொவிற் தொற்றாளர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் கொவிற் நோயாளர்களுக்கான இடைநிலை மையம் ஆகியவற்றிலும் அதிக நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக பதில் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கோப்பாய் பகுதியில் உள்ள கொவிட் தொற்றாளர்களுக்கான இடை சிகிச்சை நிலையத்தில் சுமார் 420 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவாநந்தராஜா கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.