றிஸாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த சிறுமியின் குடும்பத்துடன்

பேரம்பேசி மரணத்தை மறைக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் கொழும்பு நீதிமன்றில் தெரிவிப்பு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 25 23:12
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 00:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
றிஸாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த சிறுமி காயங்களுக்கு உள்ளாகியவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிறுமியின் குடும்பத்தினரிடம் பேரம் பேசிக் குறித்த விடயத்தை மறைக்க முயற்சித்த பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருக்கு (Chief Inspector) எதிராக இலங்கை பொலிஸ் மா அதிபரோ, பொலிஸ் திணைக்களமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை குறித்து வெட்கித் தலை குனிய வேண்டும் எனப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் கொழும்பு நீதிமன்றில் தெரிவித்தார்.
 
முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்து தீக் காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த மலையகச் சிறுமி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதிமன்றில் கடந்த திங்கள் இடம்பெற்றவேளையே குறித்த வழக்கில் விசாரணையாளர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி காயங்களுக்கு உள்ளான சம்பவம் நடைபெற்ற தினமன்று அதனை கேள்வியுற்று மலையகம் டயகம பகுதியில் இருந்து கொழும்பில் உள்ள றிஸாத் பதியூதீன் இல்லத்திற்கு வருகை தந்த சிறுமியின் உறவினரிடம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் கொவிட்-19 தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர், "விடயத்தை பெரிதாக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளதுடன், அச்சமயம் றிஸாத் பதியூதீனின் மனைவி, சிறுமியின் சகோதரருக்கு ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் வழங்கியுள்ளார் என புலன் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த பிரதம பொலிஸ் பரிசோதகருக்கு எதிராகப் பொலிஸ் மா அதிபரோ, பொலிஸ் திணைக்களமோ இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறித்து வெட்கித் தலை குனிய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

இச்சமயம் கொழும்பு நீதவான் குறித்த வழக்கு விசாரணையில் முன்னிலையான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவிடம் இது தொடர்பில் வினவிய பொழுது குறித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் உரிய இடங்களுக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா கொழும்பு நீதவானுக்கு தெரிவித்தார்.

மலையகச் சிறுமியின் வழக்கு விசாரணை கடந்த திங்கள் அன்று கொழும்பு நீதிமன்றில் நடைபெற்ற சமயம் இது தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள றிஸாத் பதியூதீனின் மனைவி உட்பட நான்கு சந்தேக நபர்களும் கொவிட் நோய்த் தொற்றுக் காரணமாக சிறையில் இருந்து நீதிமன்றிற்கு அழைத்து வரப்படவில்லை.

இந்த நிலையில் றிஸாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டு உடலில் தீ பிடித்து உயிரிழந்த இஷாலினியின் குறித்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தரகரான டயகம பகுதியைச் சேர்ந்த சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம், றிஸாத் பதியூதீனின் மாமனார் மொகம்மது சிஹாப்தீன், றிஸாத் பதியூதீனின் மனைவி மொகம்மது சிஹாப்தீன் ஆயிஷா மற்றும் றிஸாத் பதியூதீனின் மைத்துனர் மொகம்மது சிஹாப்தீன் இஸ்மத் ஆகியோர் குறித்த வழக்கில் முறையே 1ம் 2ம் 3ம் மற்றும் 4ம் சந்தேக நபர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றில் மேலும் தெரிவித்தார். அத்துடன் மேற்படி இஷாலினியின் வழக்கில் முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் ஐந்தாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

குறித்த ஐந்து சந்தேக நபர்களுக்கும் எதிராக, 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க மற்றும் 2006ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க தண்டனை சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின் 308,358,360 ஆவது அத்தியாயங்களின் கீழ் 18 வயதின் கீழான ஒருவரை அடிமைத்தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை, அவ்வாறான ஒருவரைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, அத்துடன் கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக பொலிஸார் இதுவரை மேற்கொண்ட புலன் விசாரணைகளின் மேலதிக அறிக்கையையும் பிரதி சொலிசிட்டார் ஜெனரல் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

சம்பவ இடமாகக் கருதப்படும் குற்றம் இடம் பெற்றது என நம்பப்படும் இடம் சம்பவத்தின் பின்னர் மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பிரதி சொலிசிட்டார் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

சிறுமியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பீடத்தைச் சேர்ந்த மூன்று வைத்திய நிபுணர்களினால், இரண்டாவது தடவையாகப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நிபுணர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் நாட்பட்ட பாலியல் ஊடுருவலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் அவர் எந்தக் காலப்பகுதியில் பாலியல் ஊடுருவல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதைக் கூறுவது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் மேலும் தெரிவித்தார்.

சம்பவதினம் எரிகாயங்களுக்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக 1990 எனும் அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனின் வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சமயம் குறித்த அம்பியூலன்ஸ் சேவையில் தாதியாக செயல்பட்டவர், தாம் சம்பவ இடத்திற்கு வரும் வரை தீக்காயத்திற்கு உள்ளான சிறுமியின் அவசர முதல் உதவிகளை செய்து அவரின் உடலைக் குளிர்மைப்படுத்துமாறும் அவரை வைத்தியசாலைக்கு தாம் அழைத்து செல்லும் வகையில் அவரைத் தயார்படுத்துமாறும் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியோருக்கு அறிவுறுத்தியதாகத் குறித்த பெண் தாதி, பொலிஸாருக்கு அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பையடுத்து சம்பவம் நடந்த வீட்டிற்குச் சென்றவேளை தீக் காயத்திற்கு உள்ளான இஷாலினிக்கு தாம் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் எவ்விதச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பியூலன்ஸில் பணியாற்றிய அஞ்சலி எனும் மருத்துவ தாதி பொலிஸாருக்கு வழங்கியுள்ள தனது வாக்கு மூலத்தில் மேலும் தெரிவித்துள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றில் மேலும் தெரிவித்தார்.

சம்பவதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட பொழுது அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் தாதியர் உட்பட 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவையில் பணியில் இருந்த தாதி ஆகியோர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றுமொரு புதிய தகவலொன்றும் வெளிப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சிறுமியை தீக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதித்த இவ்வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான மொகம்மது சிஹாப்தீன்(றிஸாத் பதியூதீனின் மாமனார்) சிறுமி கேஸ்" (Gas) மூலம் ஏற்பட்ட தீயினால் காயத்திற்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் கூறினார்.

இந்த நிலையில் கொழும்பு மாவட்ட நீதவான் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் இவ்வழக்கின் ஐந்தாவது சந்தேக நபரான றிஸாத் பதியூதீனை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.