வடமாகாணம்

மன்னாரில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரம்

5 ஆயிரத்தி 626 பேர் முதலாவது தடுப்பூசியைக்கூட செலுத்தவில்லையென்கிறார் பணிப்பாளர்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 26 21:04
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 23:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் மாவட்டத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில் 5 ஆயிரத்தி 626 பேர் தமது முதலாவது தடுப்பூசிகளைக் கூட பெற்றுக் கொள்ளாமல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை காலை நடைபெற்றபொழுதே மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில் 69.5 சதவீதத்தினர் மட்டுமே தமது முதலாவது கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் அவர்களையும் சேர்த்து மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 59 ஆயிரத்தி 770 பேர்களுக்கு முதலாவது தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 49 ஆயிரத்தி 844 பேர்கள் தமது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடந்த செவ்வாய்கிழமை 60 வயதிற்கு மேற்பட்ட 600 பேர்களுக்கு அவர்களின் முதலாவது தடுப்பூசிகள் அவர்களின் வீடுகளில் வைத்துச் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மன்னாரில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1400 பேர்களுடைய விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக தற்பொழுது திரட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 24ஆம் திகதி செவ்வாய்கிழமை 66 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இம் மாதம் ஆரம்பத்தில் இருந்து கடந்த செவ்வாய் வரை 493 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1517 தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இலங்கையில் கொவிட் நோய்த் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 1534 கொவிட் நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் மேற்படி ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.