கொவிட் நோய்ப்பரவல்- வடமாகாணம்

யாழ்ப்பாணத்தில் இதுவரை 224 பேர் மரணம்

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் என்கிறார் அரச அதிபர்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 28 18:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 29 01:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் -19 நோய் தொற்று மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவிவரும் நிலையில் கடந்த வெள்ளிவரை 224 மரணங்கள் யாழ் மாவட்டத்தில் சம்பவித்துள்ளதாகவும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நிகழ்ந்த மொத்த கொவிட் மரணங்களில் 75 வீதமான மரணங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது கொவிட் தொற்றும் அதனால் ஏற்படும் மரணங்களும் தீவிரமாக உள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டத்தின் சுகாதாரத்துறை சார்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மிகுந்த அர்ப்பணத்துடன் சுகாதாரத் திணைக்கள பணியாளர்கள் கொவிட் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட பகுப்பாய்வில் யாழ் மாவட்டத்தில் கொவிட் நோய்த் தொற்றினால் மரணித்தவர்களில் சுமார் 70 வீதமானோர் கொவிட் தடுப்பூசிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதையடுத்து கொவிட் தடுப்பூசிகளைப் பெறாதவர்களுக்கு அதனைச் செலுத்தும் நடவடிக்கைகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளில் 239 பேர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 318 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் மேலும் 70 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழனன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகளில், மேலும் ஒரு தொகைக் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 ஆயிரத்தி 112 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுக்குள்ளும் கொரோனா நோய்த் தொற்று ஊடுருவியுள்ளது. அரச திணைக்களங்களில் பணியாற்றும் ஓரிருவர் தினமும் கொவிட் தொற்றினால் பீடிக்கப்படுகின்றனர்.

அத்துடன் யாழ் நகரில் இயங்கும் ஒரு பிரபல தனியார் வங்கி ஊழியர்கள் பலர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ் மாவட்டச் செயலகத்தில் எனது அலுவலக உதவியாளர் ஒருவரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், நான் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்.

அத்துடன் எனது கடமைகளை நான் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மேற்கொள்கின்றேன். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் நிலவரம் மிகவும் கவலையளிக்கக் கூடிய வகையில் காணப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் கொவிட் தொடர்பில் அதன் தாற்பரியத்தை உணர்ந்து அதிக கவனத்துடன் சுகாதார நடைமுறைகளை கைக்கொள்ள வேண்டும்.

மேலும் யாழ் மாவட்டத்தில் இன்று நிலவும் மிக மோசமான நிலைக்கு பொது மக்களின் அதீத அலட்சியப் போக்கே பிரதான காரணம். யாழ்ப்பாணத்தில் கொவிட் நோய் மிக தீவிரமாக பரவி வருவது தொடர்பில் யாழ் மக்களுக்கு அண்மைக்காலங்களாக சுகாதார அதிகாரிகளினால் பல தடவைகள் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

திருமண வைபவங்களை நடத்த வேண்டாம் எனக் கூறப்பட்டது. எனினும் பல திருமண நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் யாழில் கோவில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் மற்றும் ஆலய உற்சவங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டது. எனினும் அவை யாவும், யாழில் நடைபெற்றது.

சுகாதார அதிகாரிகளினால் பல தடவைகள் பல அறிவிப்புகள் விடுக்கப்பட்டும் அவை தொடர்பில் பொது மக்கள் மெத்தனப்போக்கில் செயல்பட்டு, விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அனைத்தையும் அசட்டை செய்ததின் விளைவாக இன்று முழு யாழ் மாவட்டமும் கொவிட் தொற்றுடன் கடுமையாகப் போராடி வருகிறது. அத்துடன் தினமும் அதிக கொவிட் மரணங்களும் யாழ் மாவட்டத்தில் சம்பவிக்கின்றது.

தற்போது நிலவும் கொவிட் நோய்த் தொற்று பரவல் குறித்து பொது மக்கள் அனைவரும் அதிக அவதானத்துடன் செயல்படவேண்டும். எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்தில் கொரொனா நோய்த் தாக்கம் அதிகரிக்கலாம். இந்த நிலையில் பொதுமக்கள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் தம்மை, தாமே சுய தனிமைக்கு உட்படுத்திக் கொள்ளும் அளவிற்கு யாழ்ப்பாணம் நிலவரம் மாறிவிட்டது என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.