இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு-

ஆடு, மாடு, கோழிகள் தேவையில்லை- அரசாங்கத்திடம் உறவினர்கள் கடும் ஆட்சேபம்

நிவாரணம் என்ற பெயரில் நீதியை மறைப்பதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 31 12:22
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 31 21:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறவுகள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என பல வருடங்களாக அங்கலாய்த்து வரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தாய்மார்களிடம் ஆடு மாடுகள் மற்றும் கோழிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அது தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று திங்கள் காலை மன்னார் நகரில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அவர் குறித்த ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் உட்பட இலங்கை தீவின் பல இடங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் தமது உறவினர்கள் குறித்து தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

தமக்கு ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. மேலும் நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பிலேயே போராட்டங்களை நடத்தி வருகின்றோம். எனினும் சர்வதேசம் அதனைக் கருத்தில் கொள்ளாதுள்ளதுடன், எம்மை திரும்பியும் பார்க்காமல், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நிரந்தரமாக காணாமற்போகச் செய்வதற்கான செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுக்காக எத்தனையோ வருடங்களாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றோம். எங்களுக்கான உரிய தீர்வும் நீதியும் கிடைக்கும் என்றும், எமது பிள்ளைகள் மற்றும் உறவுகள் எம்மிடம் திரும்பி வருவார்கள் என்றும் எதிர்பார்த்து பல வருடங்களாகக் காத்திருக்கின்றோம்.

ஆனால் இன்று வரை ஒன்றுமே நடைபெறவில்லை. மேலும் கடந்த பல வருடங்களாக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினத்தை அனுஷ்டித்து வருகின்றோம். எனினும் இதுவரை எவ்வித பிரயோசனமும் எமக்கு கிடைக்கவில்லை. சர்வதேசம், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எமக்கு நீதியைப் பெற்றுத் தரும் எனும் நம்பிக்கையில் பல வருடங்களாக நாங்கள் வீதிகளில் போராடி வருகின்றோம். ஆனால் சர்வதேசம் அது தொடர்பில் எவ்விதக் கரிசனையும் இல்லாதுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருவதாக கடந்த கால ஜெனிவாப் பேச்சு வார்த்தையின் போதும் கூறினார்கள். ஆனால் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துள்ள சிங்கள அரசியல்வாதிகள் இலங்கையில் எவரும் காணாமற் போகவில்லை என்றும், இவ்விதம் காணாமல் போனவர்கள் என்று கருதப்படுபவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நோய்த் தொற்றுக் காரணமாக காணாமற் போன தமது உறவினர்கள் தொடர்பில் வீதிகளில் இறங்கிப் போராடமுடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்து தமது உறவுகளை எண்ணி அழுது புலம்புகின்றனர். எனினும் நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். அல்லது அவர்களுக்கு என்ன நடந்து என்று கூறுங்கள். நீங்கள், எங்கள் பிள்ளைகள் குறித்து உரிய பதில்களை எமக்கு வழங்கும் வரை எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம்

மேலும் மன்னார் நகரில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தினால் இதுவரை எவ்வித பயனும் ஏற்படவில்லை. அத்துடன் கிளிநொச்சி நகரிலும் கடந்த 12ஆம் திகதி இரகசியமாகக் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பணத்திற்காகப் போராடவில்லை.

நீதிக்காகவே போராடுகின்றனர். அதை சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் உணர்ந்து கொள்ளவேண்டும். தற்போது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேசமும் நாடகம் ஆடுவதாக நாம் சந்தேகம் கொண்டுள்ளோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் சங்கத்தின் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா மேலும் தெரிவித்தார்.