இலங்கைத்தீவில்

வேகமாகப் பரவும் கொவிட். இரண்டு நாட்களில் 409 பேர் மரணம்

கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணம் நோய்த் தொற்றுக்குள்ளாவதாகக் கூறப்படுகின்றது
பதிப்பு: 2021 செப். 01 20:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 21:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கொவிட் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்கள் நீடிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனாலும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றுச் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் 215 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
 
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மக்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றார். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் கட்டுப்பாடாக வீடுகளில் இருக்க வேண்டுமெனவும் அவர் இன்றிரவு இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை. கொழும்பு, கம்பகா மாவட்டங்களுக்கு அடுத்ததாக யாழ்ப்பாணம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு கம்பகா ஆகிய மாவட்டங்களுக்கு வந்து செல்லும் அனுமதி பெற்ற வாகனங்களின் வருகையைக் குறைக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை 194 பேரும் நேற்றுப் புதன்கிழமை 215 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களில் 409 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.