வடமாகாணம்

மன்னாரில் கொவிட் தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

உடல்களைத் தகனம் செய்ய புதிய மயானம்
பதிப்பு: 2021 செப். 03 22:32
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 02:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கொவிட்- 19 நோய்த் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் மன்னார் நகரில் முப்பது மில்லியன் ரூபா செலவில் புதிய மின் மயானம் ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கு தேவையான புதிய வாகனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் அதி தீவிரமாகக் கொரோனா நோய்த் தொற்றுப் பரவிவரும் நிலையில் குறித்த நோய்த் தொற்றினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட மன்னார் பொது வைத்தியசாலையில் ஒரே நாளில் நால்வர் மரணமடைந்திருந்தனர்.


 
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொவிட்டினால் மரணமடைந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதற்காகப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுமார் எண்பது கிலோமீற்றர் தூரமுடைய வவுனியா பூந்தோட்டம் மின் மயானத்திற்கு சடலங்களை எடுத்துச் செல்லவேண்டியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கொவிட் நோய்த் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களும் வவுனியா நகர சபையின் பராமரிப்பில் உள்ள பூந்தோட்டம் மின் மயானத்திற்கே தகனத்திற்காக எடுத்து வரப்படுகிறது.

இந்த நிலையில் வவுனியா நகர சபைக்கு சொந்தமான பூந்தோட்ட மின் மயானத்தில் தினமும் அதிக அளவான சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு வருவதினால் மன்னாரில் இருந்து எடுத்துச் செல்லப்படும் இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்துடன் குறித்த பூந்தோட்டம் மின் மயானத்தில் தினமும் அதிக எண்ணிக்கையான சடலங்கள் தகனம் செய்யப்படுவதினால், தகனம் செய்யும் இயந்திரம் அடிக்கடி பழுதடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மின் மயானத்தில் சடலம் ஒன்று தகனம் செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலயங்களின் பின்னரே பிறிதொரு சடலத்தை அடக்கம் செய்யமுடியும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் நகரில் மின் மயானமொன்றினை உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டீ மெல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் இது தொடர்பான கூட்டமொன்றும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த 31ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் இயங்கும் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் மன்னார் நகர பொது மயானத்தில் குறித்த மின் மயானத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறித்த கூட்டத்தில் தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், குறித்த மின் மயானத்தினை அமைப்பதற்கும், அங்கு உடல்களை எடுத்துச் செல்வதற்கான புதிய வாகனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்காவும் 30 மில்லியன் ரூபா செலவாகும் என மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மின் மயானமொன்றினை அமைப்பதற்கான நிதியை , மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு, குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மின் மயானத்தை அமைப்பதற்கு சுமார் ஐந்து மில்லியன் ரூபாக்களை மன்னார் நகர சபை ஒதுக்கீடு செய்துள்ளது.