இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

சந்தேக நபர்களை விசாரணை செய்ய விசேட நீதிபதிகள் குழு

றிஷாட் பதியுதீன் உட்பட 700 பேர் தடுப்புக்காவலில்
பதிப்பு: 2021 செப். 04 22:37
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 02:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதானவர்களில் 26 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கினை ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட விஷேட குழுவொன்றை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய கடந்த மாதம் நியமனம் செய்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமே உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதம நீதியரசரினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளின் ஆறு இடங்களில் பயங்கரவாதிகளினால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதலில் 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன் இத் தாக்குதல்களில் 500 க்கும் அதிகமானோர் காயத்திற்கும் உள்ளாகினர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பிரபல அரசியல்வாதிகளான ஆசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் உட்பட சுமார் 700க்கும் அதிகமானோர் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகத் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 26 சந்தேக நபர்களின் வழக்குகளை சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள நிலையில் அதனை ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்வதற்காக நீதிபதிகளை நியமனம் செய்யுமாறு சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரெட்ணம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய நியமனம் செய்துள்ளார்.

சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்குகளில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களாக நௌபர் மௌலவி, சாஜீத் மௌலவி, தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் வாகனச் சாரதியான கபூர் மாமா என அழைக்கப்படும் ஆதம் லெப்பை, மொகம்மட் சனஸ்தீன், மொகம்மட் றிஸ்வான், மொகம்மட் மில்கஹான் மற்றும் சாஜீத் அப்துல்லா உட்பட 26 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் சதி, பாரிய தாக்குதலொன்றுக்கு தயார் ஆகியமை, தாக்குதலுக்கு உதவியமை, தாக்குதலை ஊக்குவித்தமை, வெடிபொருள்களையும் ஆயுதங்களையும் சேகரித்தமை, கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 23270 குற்றச்சாட்டுகள் மேற்படி 26 எதிரிகளுக்கும் எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது.