மைத்திரி- ரணில் அரசாங்கத்தை

பதவி கவிழ்க்கும் மஹிந்த அணியின் எதிர்ப்புப் போராட்டத்தில் பெளத்த பேரினவாதிகள் பங்கேற்பு- கொழும்பு ஊடகங்கள்

வெள்ளவத்தையில் மக்களைச் சந்தித்த கோட்டபய ராஜபக்ச
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 03 08:50
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 03 23:22
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மேற்குலக நாடுகளினால் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் முதலாவது மக்கள் போராட்டத்தை இல்ங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் ஆரம்பித்துள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் போரை நடத்தி இன அழிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச ஆட்சியாளர்கள் ஒன்று கூடி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், பெருமளவு சிங்கள பௌத்த பேரினவாதிகள் கலந்துகொண்டதாகக் கொழும்பு ஊடகங்கள் கூறியுள்ளன. ஜனபல சேன என்ற சிங்களப் பெயரிலான இந்த எதிர்ப்புப் பேரணி, தொடர்ச்சியாக இலங்கையின் சகல பகுதிகளிலும் நடைபெறும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இந்தப் பேரணி நடைபெற்றது.
 
பேரணியின் முடிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ச, மைத்திரி- ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைத்து மக்களும் ஒன்றினைய வேண்டும் என்று கூறினார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர் கேட்டபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக கூர்மைச் செய்தித் தளத்தில் ஏலவே செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பதவி கவிழ்க்கும் போராட்டம் ஒன்றை மஹிந்த அணி கொழும்பில் நடத்தியுள்ளது.

மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களை கைகளில் ஏந்தியவாறு கோஷம் எழுப்பிய மஹிந்த ஆதரவாளர்கள், இலங்கைப் பொலிஸாரின் அதிகாரங்களை, இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

அதேவேளை, அழைப்பு விடுக்கப்பட்டபோதும் ஜே.வி.பி உறுப்பினர்கள் எவரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ச ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ஜே.வி.வி ஒருபோதும் அனுமதிக்காது என அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

இதேவேளை இந்தப் பேரணியில் பங்கு பற்றுவதற்காக அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் இருந்து மக்கள் பேரூந்துகளில் அழைத்துவரப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

போரை நடத்தி. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளை இலங்கை இராணுவ நிர்வாகத்திற்கு உட்படுத்திய மஹிந்த ஆட்சியாளர்கள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு அழைப்பு விடுவது வேடிக்கையானதென இடதுசாரி முன்னணியின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார்.

மைத்திரி- ரணில் ஆட்சிகளும் மஹிந்த ஆட்சியாளர்கள் போன்று செயற்படுவதால் தமிழ் மக்கள் இந்த இரு ஆட்சியாளர்களையும் நிராகரித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில். இலங்கையின் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர் கேட்டபய ராஜபக்ச மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கோட்டபய உரையாற்றினார்.

பெருமளவு முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டதாக முன்னாள் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவத் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ச ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

கோட்டபயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில் பிரச்சினை இல்லையென கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ.பி.திஸாநாயக்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.