உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களில் கைதாகியுள்ள

றிஸாத் பதீயூதீன் சிறைச்சாலை விதிகளை மீறினார்

பாராளுமன்றத் தொலைபேசியில் இருந்து சிறையில் உள்ள தனது மனைவியுடன் பேச முற்பட்டதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 செப். 09 19:56
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 10 02:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் மலையகம் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிஸாத் பதீயூதீன் சிறைச்சாலை விதி முறைகளுக்கு முரணாகப் பல செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இதனால் சிறை அதிகாரிகளுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் தெரிவித்தன.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அங்குள்ள மருத்துவமனையில் கைதிகளுக்கு மருந்து வழங்கிகொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு அனுமதியின்றி வருகை தந்த றிஸாத் பதியூதீன் அவ்வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன், அவரை தகாத வாரத்தைகளினால் ஏசி பயமுறுத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர் மகசின் சிறைச்சாலை அத்தியட்சகரிடமும் பொரளைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் முதலாம் ஆம் திகதி இரவு கொழும்பு மகசீன் சிறைச்சாலையின் விளக்கமறியல் கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள றிஸாத் பதியூதீன் தான் தடுத்துவைக் கப்பட்டுள்ள அறையில் இருந்தவாறு கைத்தொலைபேசி மூலம் உரையாடியவேளை அதனை சிறை அதிகாரிகள் நேரடியாகவே கண்ணுற்றுள்ளனர்.

இதையடுத்து றிஸாத் பதியூதீன் தனது சிறை அறையின் ஜன்னல் வழியாக குறித்த கைத்தொலைபேசியை வீசி எறிந்துள்ளார். இந்த நிலையில் குறித்த தொலைபேசி மகசின் சிறைச்சாலை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விளக்கமறியலில் உள்ள றிஸாத் பதியூதீன், குறித்த கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி பல உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் அறியவந்துள்ளது. அத்துடன் குறித்த கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி றிஷாத் பதியூதீன் இலங்கையின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுடனும் தொடர் ஏற்படுத்தியாகத் தென்னிலங்கை ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலை வைத்தியருக்கு கொலை அச்சுருத்தல் விடுத்தமை மற்றும் சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்தியமை ஆகிய இரண்டு சம்பவங்கள் தொடர்பில் தற்போது இலங்கை சிறைச்சாலை திணைக்களம், சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் றிஸாத் பதியூதீனுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் சிறைச்சாலை தீர்பாயம் முன்னிலையில் ஆஐர்படுத்த ப்படவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தது.

இதேவேளை கடந்த ஆறாம் திகதி முற்பகல் 11.55 மணியளவில் முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு அழைப்பை மேற்கொண்ட றிஸாத் பதியூதீன் அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியுடன் உரையாடவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் எனினும் றிஸாத் பதியூதீனின் அழைப்புக்கு பதிலளித்த வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி, றிஸாத் பதியூதீனின் கோரிக்கை சிறைச்சாலைச் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி அக்கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

றிஸாத் பதியூதீன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பு தொடர்பில் ஆராய்ந்து வரும் சிறை அதிகாரிகள் குறித்த தொலைபேசி அழைப்பு பாராளுமன்றத்தில் உள்ள நிலையான தொலைபேசி (Land Line) ஒன்றில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீன் கடந்த ஆறாம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக சிறைச்சாலையில் இருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்ற தொலைபேசியைப் பயன்படுத்தி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் கொழும்பு தகவல்கள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தன.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக உள்ள றிஸாத் பதியூதீன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் சிறப்பு உரிமையைப் பயன்படுத்தி இலங்கை சிறைச் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் முரணாக செயல்படுவதினால் சிறை அதிகாரிகளும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மேற்படி கொழும்பு வட்டாரம் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தது.