வடமாகாணம்

வவுனியாவில் அதிகரிக்கும் கொவிட் மரணங்கள்

11ஆம் திகதிவரை 63 பேர் மரணம்
பதிப்பு: 2021 செப். 12 20:53
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 13 23:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கொவிட்- 19 நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் இம் மாவட்டத்தில் கொவிட் மரணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். வவுனியா மாவட்ட மக்கள் கொவிட் நோயின் பாரதூரத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்களின் தொடர்ச்சியான அசமந்த போக்கு காரணமாக கொவிட் நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் கொவிட் தொற்றினால் இம் மாதம் 11ஆம் திகதிவரை வவுனியா மாவட்டத்தில் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
வவுனியா மாவட்டத்தில் டெல்டா தொற்றுடனும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளமை அம்மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு மேலும் பல நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 35 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை மேலும் 15 பேர் டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார அதிகாரிகள் கூர்மைக்கு தெரிவித்தனர்.

குறுகிய சில நாட்களுக்குள் டெல்டா பிறழ்வு தொற்றுடன் 50 பேர்கள் அடையாளம் காணப்படும் அளவிற்கு கொவிட் தொற்று நிலவரம் வவுனியா மாவட்டத்தில் மிக மோசமாகக் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் செப்டம்பர் 1ஆம் திகதி தொடக்கம் கடந்த 11ஆம் திகதிவரையான, பதினொரு நாட்களில் 1651 கொவிட் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் இருந்து, இம்மாதம் 11ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் 3328 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்று 11ஆம் திகதி சனிக்கிழமை வரை 276 பேர் கொவிட் தொற்றுடன் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ் எண்ணிக்கையில் நேற்று 11ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 95 கொவிட் தொற்றாளர்களும் அடங்குவதாக டொக்டர் தர்மராஜன் வினோதன் மேலும் தெரிவித்தார். மேலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் -19 தொற்றினால் 22 பேர் இறந்துள்ளனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 1960 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.