வடமாகாணம்

தலை மன்னாருக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட போதைப் பொருள்

பொலிஸாரால் பறிமுதல்- சுமார் எட்டுக்கோடி பெறுமதியெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2021 செப். 16 20:44
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 20:53
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கை தீவில் கொவிட் - 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி மிகத் துணிகரமாக இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகொன்றில் தலைமன்னாருக்கு கடத்தி வரப்பட்ட சுமார் எட்டு கோடி பெருமதியான ஜஸ் எனப்படும் போதைவஸ்து அடங்கிய பொதிகள் சென்ற செவ்வாய் நள்ளிரவு தலைமன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஐஸ் போதைவஸ்தினை கடத்தி வந்த சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் கடற்பரப்பில் செவ்வாய் நள்ளிரவு இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வேளை அக்கடற்பகுதியில் சந்தேகத்திற் கிடமான முறையில் சென்ற கண்ணாடியிழை மீன்பிடிப்படகொன்றினை வழிமறித்த இலங்கை கடற்படையினர், அப்படகினை சோதனைக்கு உட்படுத்தினர்.

இவ்வேளை குறித்த படகில் காணப்பட்ட வலைகளுக்கு மத்தியில் பல பொதிகள் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதைக் கடற்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து படகில் காணப்பட்ட பொதிகளைப் பரிசீலனைக்கு உட்படுத்தியவேளை குறித்த பொதிகளில் 9 கிலோ 735 கிராம் நிறையுடைய ஐஸ் எனும் போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்டமை தெரியவந்தது.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் இது தொடர்பாக தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் கடற்படையினரிடம் இருந்து மேற்படி 10 பொதிகள் அடங்கிய ஐஸ் போதைவஸ்தி னையும், அதனை எடுத்து வரப்பயன்படுத்திய மீன்பிடிப்படகையும் கையேற்றதுடன் குறித்த போதைவஸ்தினை இந்தியாவில் இருந்து மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வந்த தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும் கடந்த செவ்வாய் நள்ளிரவு கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைவஸ்த்து அடங்கிய பொதிகள் தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் கைதான மீனவர்கள் நால்வரும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளையடுத்து அடுத்து சந்தேக நபர்கள் நால்வரையும் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

இதைவேளை இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சமையலுக்கு பயன்படுத்தும் பெருமளவு உலர்ந்த மஞ்சள் கட்டிகள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசத்தின் அடம்பன் பகுதியில் இருந்து இன்று புதன் அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளது. அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வீடொன்றில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் குறித்த வீட்டில் 29 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 1164 கிலோ நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கட்டிகளை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் மஞ்சள் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரியையாளர் அடம்பன் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கைதான சந்தேக நபர் மன்னார் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகளும் மன்னார் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக அடம்பன் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.