வடமாகாணம் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் தனது

பதவி நீக்கத்துக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் மனு

புதிய தவிசாளர் தெரிவு நாளை நடைபெறுமா?
பதிப்பு: 2021 செப். 28 22:17
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 01:33
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாண ஆளுநரினால் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை உறுப்புரிமையில் இருந்தும் தான் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் இன்று 28ஆம் திகதி செவ்வாய் மாலை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். புதிய தவிசாளர் தெரிவிற்கான விசேட அமர்வு நாளை புதன்கிழமை காலை மன்னார் பிரதேச சபை செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் தவிசாளரால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் அவரின் தவிசாளர் பதவியைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்பட்டதாகவும், அவர் ஒழுங்கீனமான பல செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், வட மாகாண ஆளுநருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது.

இதையடுத்து முன்னாள் தவிசாளர் முகம்மது முஜாகீரின் பதவிக்காலத்தில் அவரின் ஒழுங்கீனங்கள் மற்றும் தகுதியின்மை குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக வட மாகாண ஆளுநர் பீ. எஸ். எம். சார்ள்ஸினால் ஓய்வு பெற்ற நீதிபதி கந்தையா அரியநாயகத்தின் கீழ் தனிநபர் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஒகஸ்ட் மாதம் 2ஆம் திகதி வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸிடம் குறித்த விசாரணைக் குழுவினால் கையளிக்கப்பட்ட விசாரணையின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், வட மாகாண ஆளுநரினால் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவி மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்து சாகுல் கமீட் முகம்மது முஜாகீர் கடந்த 14ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் வட மாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸினால் மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட வர்த்தமாணி அறிவித்தலும் கடந்த 13ஆம் திகதி மாலை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வட மாகாண ஆளுநரினால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்தும் பிரதேச சபை அங்கத்துவப் பதவியில் இருந்தும் தாம் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். எச். எம். முஜாஹிரினால் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் இன்று புதன் மாலை இடைக்காலத் தடை உத்தரவு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை புதன்கிழமை காலை மன்னார் பிரதேச சபையில் நடைபெறவுள்ள புதிய தவிசாளர் தெரிவை இடைநிறுத்தத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், வட மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட தனது தவிசாளர் பதவி நீக்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவி நீக்கம் ஆகியன சட்டவிரோதமானதென உத்தரவிடக்கோரியும் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் கமீட் முகம்மது முஜாகீரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த ரீட் மனுவினை நாளை விசாரணைக்கு எடுப்பதற்கு கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.