இலங்கைத்தீவில்

மீண்டுமொரு தாக்குதலா? உரிய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு பேராயர் இல்லம் வேண்டுகோள்

கடற்படை மறுத்ததை ஏற்க முடியாதென்கிறார் அருட்தந்தை சிறில் காமினி
பதிப்பு: 2021 செப். 29 22:18
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 01:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இலங்கைத் தீவில் உள்ள தேவாலயங்கள் மீது நடத்தப்படுமென இலங்கைக் கடற்படை வெளியிட்ட அறிவிப்புத் தொடர்பாக அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பில் உள்ள பேராயர் இல்லம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புத் தவறானதென பின்னர் இலங்கைக் கடற்படைத் தலைமைப் பீடம் கூறியதோடு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் அது குறித்து மன்னிப்பும் கேட்டிருந்தது.
 
ஆனாலும் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாமென வெளியான அறிவிப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்தித் தேவாலயங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நீதிகோரும் குழுவின் தலைவர் அருட்தந்தை சிறில் காமனி பேராயர் இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாமென பொதுபல சேனவின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அருட்தந்தை சிறில் காமனி, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்தும் முன்கூட்டியே வெளியான எச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லையெனவும் குற்றம் சுமத்தினார்.

உரிய பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் பேராயர் இல்லத்திற்கு உறுதிப்படுத்த வேண்டுமெனவும் இல்லையேல் அனைத்துத் தேவாலயங்களும் மூடப்பட வேண்டிய நிலை உருவாகுமெனவும் அருட்தந்தை சிறில் காமனி எச்சரிக்கை விடுத்தார்.