வடமாகாணம் மன்னாரில்

தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் வாழ்ந்தவர் அந்தோணி மார்க்

அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் இரங்கல்
பதிப்பு: 2021 ஒக். 11 23:06
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 14:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
காணி உத்தியோகத்தராகவும், உதவி காணி ஆணையாளராகவும் சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் அரச சேவையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி, மக்களுக்கு பெரும் சேவையாற்றிய பேதிறு அந்தோணி மார்க் தனது 78வது வயதில் மரணிக்கும் வரை, குடியிருப்பதற்குத் தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் மன்னார் நகரின் பல இடங்களிலும் வாடகை வீடுகளிலேயே வசித்த நல் மனம் படைத்த மனிதரென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளராகவும் சிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிய முன்னாள் உதவிக் காணி ஆணையாளர் பேதிறு அந்தோணி மார்க் கடந்த மாதம் 21ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் மரணமடைந்தார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு அந்தோணி மார்க் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையில் கடந்த 5ஆம் திகதி மன்னார் சர்வோதயம் அமைப்பினால் அதன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த அஞ்சலி நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்ததாவது;

அமரர் அந்தோணி மார்க் அவர்கள் என்றும் மக்கள் உரிமைக்காகப் போராடிய சிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆவார். மேலும் அவர் ஊடகவியலாளராகவும் பணியாற்றி தமிழ் பேசும் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வந்த ஊடகப் போராளி.

அவர் தனக்கு என்று எதையும் தேடாமல் மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்பணித்த ஒருவராவர். மன்னார் மாவட்ட மக்கள் தமது உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் எந்த இடத்தில் ஒன்று கூடி போராட்டங்களை மேற்கொண்டாலும் அந்த இடத்தில் எல்லாம் அவருடைய பிரசன்னமும் ஆதரவும் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அவர் முன் நின்று இதயசுத்தியுடன் செயற்பட்டார். இந்த வகையில் அந்தோணி மார்க்கின் மறைவு மன்னார் மாவட்ட மக்களுக்கு ஓர் பாரிய பேரிழப்பாகும்.

மேலும் மறைந்த அந்தோணி மார்க் அவர்களை, நான் சிறிய வயதில் இருந்து நன்கு அறிவேன். அவர் அரச ஊழியராக மன்னார் மாவட்டத்தின் விவசாயத்திற்கும் நீர்ப்பாசனத்திற்கும் ஆற்றிய அளப்பறிய சேவைகளை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். அவரின் எழுத்தாற்றல் மற்றும் மும்மொழி புலமை காரணமாக மன்னார் மாவட்ட விவசாய மேம்பாட்டிற்கு அவர் மேற்கொண்ட உன்னத சேவைகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியவை ஆகும்.

அத்துடன் ஒரு மனிதர் உலகில் வாழும் போது அவர் மேற்கொண்ட நற்காரியங்களை அவரின் மறைவின் பின் நினைவு கூறுவதும் அவரைப் பற்றி புகழ்வதும் அவர் எவ்வாறு இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார் என்பதை அறியச் செய்வதுமே அவருக்கு உண்மையாக நாம் செய்யும் அஞ்சலியாகும்.

அமரர் மார்க் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் அதீத புலமை கொண்டிருந்தார். அத்துடன் அதிக பேச்சாற்றலும் சிறந்த நடத்தையும் கொண்ட பண்பு நிறைந்த மனிதராக அவர் என்றும் எங்கள் கண்களுக்கு புலப்பட்டார்.

கடந்த காலங்களில் எந்தவொரு நிகழ்விற்கும் சிங்கள மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் பேர் ஆற்றல் கொண்ட ஒருவரே அமரர் அந்தோணி மார்க் என்றால் அது மிகையாகாது. மேலும் அரச சேவையில் நேர்மை வாய்ந்த அதிகாரியாகப் பணியாற்றி ஏனைய அரச அதிகாரிகளுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்தார்.

இவ்வாறான சிறந்த மனிதரை, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காவும் போராடி தான் சார்ந்த இனத்தையும் மொழியையும் அதீதமாக நேசித்த ஒருவரை தற்போது நாம் இழந்துள்ளோம். நம் நாட்டில் பரவிவரும் கொரோனா நோய் தொற்றினால் இவர் பாதிக்கப்பட்டு அண்மையில மரணமடைந்தமை நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் இழப்புக்கு எமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.