சமூக செயற்பாட்டாளர்கள்

தமிழக அரசின் ஊடக அடக்குமுறை தொடர்பாக டில்லியில் விளக்கமளிப்பு-பாசிசம் தொடருவதாகவும் குற்றச்சாட்டு

ஜனநாயகத்துக்கு முன்னுரிமை வழங்குமாறு வலிறுத்தல்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 05 02:50
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 10:24
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழகத்தின் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் தொடரும் அடக்குமுறைகளை, ஜனநாயகத்திற்கு எதிரான போக்கை, இந்திய ஒன்றிய முழுமைக்கும் விளக்கவும், நேச சக்திகளை ஒன்று திரட்டவும் தமிழக கள செயற்பாட்டாளர்கள் கூட்டாக, ஓகஸ்து 4 ஆம் நாள், டெல்லியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். இதில், சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, காவல்துறையின் வன்முறை, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
 
சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்புகள் குரல் கொடுக்க முனைந்த துளிர் நிலையிலேயே, தமிழக அரசாங்கம் தனது அரச நிறுவனங்களின் துணையோடு, விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரையும் கைது செய்தது. அறவழிப்போராட்டங்கள் எதற்கும் அனுமதி இல்லை.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை சந்தித்து பேசக் கூட காவல்துறை அனுமதி மறுத்து வந்தது. ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கத் தடை.

இப்படியாக, அரச அடக்குமுறை தொடர்ந்து வந்த வேளையில், கூடங்குள அணு உலைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவரும், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான, சு.ப உதயக்குமார் தலைமையில், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு பலத்தரப்பட்ட சமூக, அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழகச் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, டில்லியில் அனைத்து ஊடகவியலாளர்களையும் சந்திப்பதும் எனவும் இந்தியத் துணைக்கண்டத்தில் பிற தேசிய இனங்களில் இருக்கும் நேச சக்திகளை இணைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டதாக பச்சைத் தமிழகம் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வேம்பை தமிழ்ச்செல்வன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி, ஓகஸ்து 4 ஆம் நாள், சமூக செயற்பாட்டாளர்கள் மேதா பட்கர், அருந்ததி ராய், பசுமைத் தமிழகம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயக்குமார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்த ர்ராஜன், பியூஸ் மனுஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.செரீஃப், இந்திய உச்சநீதிமன்ற வழக்கரைஞர் பிராசந்த் பூசன் உள்ளிட்டோர் டில்லியில் தேசிய அளவிலான ஊடகவிலாளர்களை சந்தித்து, தமிழகத்தில் நடக்கும் ஜனநாயகமற்ற பாசிச அரசாங்கத்தின் செயல்பாடுகளை விளக்கியுள்ளனர்.

குறிப்பாக, கடந்த சில வாரங்களாக ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் விதமாக தமிழகத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், சமூக செயற்பாட்டாளர்கள் பியூஸ் மனுஷ், வளர்மதி, திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் அவர்கள் மீது 1991இல் பதிவு செய்யப்பட்ட வழக்கை எடுத்து தமிழக காவல்துறை அவருக்கு நீதிமன்றம் மூலம் கைது செய்வதற்கான உத்தரவை பெற்றுள்ளதாகவும் கூர்மை அறிகிறது.

அதேபோன்று, தமிழக ஊடகவியலாளர்கள், தமிழ் ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளும் தொடர்ந்து வந்த நிலையில், ஊடக கலந்தாய்வு உரிமைகளும் பொறுப்புகளும் என்ற தலைப்பிலான கலந்தாய்வு நிகழ்ச்சி சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது.

அதில் ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தமை குறித்து கூர்மை செய்தித் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழகத்தை ஆளும் அரசாங்கத்தின் பாசிச கடும் போக்கு பெருகி வரும் இச்சூழலில் தமிழக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு வருவது ஆரோக்கியமான அரசியல் என தமிழக ஊடகவிலாளர் நியாஸ் அகமது கூர்மைக்கு கருத்து தெரிவித்தார்.

தமிழக அரசின் இவ்வாறான பாசிச மற்றும் ஊடக அடக்கு முறைகளுக்கு மத்தியி்ல், இந்தியாவின் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இயங்கும் பொது விவகார மையம் (Public Affairs Centre) வெளியிட்ட 2018-பொதுவிவகார குறியீடு (Public Affairs Index) முடிவுகளின் படி, தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சி நடப்பதாகவும் fடந்த மாதம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.