வடமாகாணம் மன்னார்

அருவி ஆற்றுக் கரையோர மணல் அகழ்வுக்கு எதிராக மனு

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான குழு நடவடிக்கை- 29 ஆம் திகதி விசாரணை
பதிப்பு: 2021 ஒக். 12 21:08
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 14:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள பரிகாரிகண்டல் கிராமசேவையாளர் பகுதியில் அருவி ஆற்றுக் கரையோரமாக நீண்ட காலமாக நடைபெற்று வரும் முறையற்ற மணல் அகழ்வினால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து அதற்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று 12ஆம் திகதி செவ்வாய்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியால் தொடுக்கப்பட்ட மேற்படி வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகள் எஸ்.பிறிமூஸ் சிராய்வா, கே.சயந்தன் , எஸ். டினேசன் ஆகியோர் மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்தனர்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரிகாரிகண்டல் கிராமத்தின் ஊடாகச் செல்லும் அருவியாற்றை மையப்படுத்தி தினமும் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. குறித்த மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் இலங்கை புவிசரிதவியல் அளவை சுரங்கப்பணியகம் ஆகியன மணல் வியாபாரிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது.

எனினும் குறித்த அனுமதிப்பத்திரங்கள் மூலம் பரிகாரிகண்டல் பகுதியில் வகை தொகையின்று தொடர்ச்சியாக மணல் அகழப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த மணல் அகழ்வினை நிறுத்துவதற்கு மன்னார் நீதிமன்றம் தடை விதிக்கவேண்டும் எனக் கோரி நானாட்டான் பிரதேச சபை தவிசாளரால் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நானாட்டான் பரிகாரிகண்டல் கிராமத்தின் அருவி ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான மணல் அகழ்வினால் அப்பகுதி மக்களின் நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வளம் நிறைந்த தோட்டக்காணிகள் உப்புத்தரவையாக மாறி வருகிறது. கால்நடைகளின் மேய்ச்சலுக்கான புற்தரவைகள் உவர் நீர் கசிவினால் கருகி வருகின்றது. நிலக்கீழ் நீர் உவராக மாறியுள்ளதினால் குடிநீர் கிணறுகள் பல பழுதடைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் பரிகாரிகண்டல் மக்கள் தமது பகுதியில் நடைபெறும் மணல் அகழ்வினால் தமது வாழ்வாதாரமான நெற்செய்கை, தோட்டச் செய்கை மற்றும் கால் நடை வளர்ப்பு ஆகியன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நானாட்டான் பிரதேச சபை தவிசாளரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பரிகாரிகண்டல் கிராமத்தில் நிகழும் மணல் அகழ்வினை நிறுத்துவதற்கு நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் நானாட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போதும் மேற்படி பரிகாரிகண்டல் கிராமத்தில் உள்ள அருவியாற்று பகுதியில் மேற்கொள்ளப்படும் முறையற்ற மணல் அகழ்வினை நிறுத்துவதற்கு நடைவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பல கோரிக்கைகளையும் விடுத்து வந்தார்.

எனினும் இது தொடர்பாக எத்தரப்பும் உரிய நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளாத நிலையில் நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளரால் மன்னார் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பரிகாரிகண்டல் கிராமசேவையாளர் பிரிவில் அருவி ஆற்றுக்கரைகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வினால் பாரிய சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். எ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.. அத்துடன் மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கும் தீங்கு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் காணப்படும் நீர், உவர் நீராக மாறி உள்ளமையைச் சான்றாகக் கொண்டு அதனை முன்வைத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்விற்குத் தடை விதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மன்னார் நீதிமன்றில் பொதுத் தொல்லை மனு எனும் வழக்கினை நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் சார்பில் இன்று தாக்கல் செய்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் மேலும் தெரிவித்தார்.

குறித்த வழக்கில் எதிராளியாக குறிப்பிட்டுள்ள பரிகாரிகண்டல் பகுதியில் மணல் அகழ்வை மேற்கொள்ளும் நிறுவனத்தை, எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மன்னார் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ள கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற்ற இவ்விதமான மணல் அகழ்வு நீதிமன்ற உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.