இலங்கைத்தீவில்

மலையகத் தமிழர்களின் போராட்டங்கள் பற்றி எடுத்துக்கூறும் வெந்து தணியாத பூமி

ஈழத்தமிழர் போராட்டத்தில் மலையக இளைஞர்களின் பங்கேற்புக் குறித்தும் விபரிப்பு
பதிப்பு: 2021 ஒக். 14 10:28
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 21:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைத்தீவின் மலையகத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வரதன் கிருஸ்ணா என்ற மூத்த ஊடகவியலாளர், வெந்து தணியாத பூமி என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கனடாவில் வாழும் வரதன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் பங்கெடுத்த ஒருவர். மலையகத் தமிழர்களின் விடுதலையும் போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்ற கருத்தைக் கொண்ட வரதன். ஆரம்பகாலங்களில் மலையகத்தில் வாழ்ந்த காலங்களில். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை முறைகள் பற்றி இந்த நூலில் விபரிக்கிறார். குறிப்பாகத் தனது போராட்ட வாழ்வு. போராட்டத்தினால் சிறைக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியெல்லாம் நூலில் விபரிக்கிறார் வரதன் கிருஸ்ணா.
 
மலையகத் தமிழ் மக்களுக்கென்று தனிப் பண்பாடு, கலை கலாச்சாரம் உண்டு. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் வேறு. வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தோடு மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒப்பிட முடியாது

கொழும்பில் இருந்து வெளிவந்த சிந்தாமணி, பின்னர் வீரகேசரி, தினகரன், ஆகிய வார இதழ்களில் எழுதிய ஆக்கங்களும் இந்த நூலில் உள்ளடங்கியுள்ளன. தினகரன், சுடர் ஒளி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைகளில் செய்தியாளராகவும் கடமையாற்றிய வரதன், அந்தப் பத்திரிகைகளிலும் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

குறிப்பாக மலையக மக்களின் வெளிக்கொணரப்படாத போராட்டங்கள் பற்றிய தகவல்கள் இந்த நூலில் அதிகமாகக் காணப்படுகின்றன. கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் கல்வித்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அணிந்துரை எழுதியுள்ளார்.

பத்திரிகையாளரும் அரசியல் விஞ்ஞான ஆசிரியருமான அ.நிக்ஸன் நூலில் வாழ்த்துக் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் குறிப்பு வருமாறு--

பத்திரிகையாளர் ஒருவருக்குத் (செய்தியாளன்) தனது சமூகம் சார்ந்த மற்றும் அதற்குரிய ஆழமான சிந்தனையும் அறிவும் இருக்க வேண்டும். வெறுமனே அன்றாடம் நடக்கும் செய்திகளை மாத்திரம் வெளியிடுபவனாக இருக்க முடியாது. அதுவும் பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றின் அல்லது விடுதலை கோரி நிற்கும் தேசிய இனம் ஒன்றைச் சேர்ந்த பத்திரிகையாளன் ஒருவன், அனைத்து விவகாரங்களையும் புரிந்தவனாக இருத்தல் அவசியம். ஆனால் சமீபகாலத்தில் இலங்கை இதழியல் செயற்பாடுகளில் அவ்வாறான பத்திரிகையாளர்களைக் காண்பது அரிது

இவ்வாறனதொரு சூழலில் இலங்கைத்தீவில் சிங்களம், தமிழ் என்று ஊடகம் இன்று இரண்டு வகையாகப் பிரிந்துள்ளது. சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தையுமே முக்கியப்படுத்துகின்றன.

தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயங்களையே பிரதானப்படுத்துகின்றன. (சிங்களப் பிரதேசச் செய்திகளையும் தமிழ் ஊடகங்கள் வெளியிடத் தவறுவதில்லை) குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் வடக்குக் கிழக்கு தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டங்கள் பற்றியே அதிகமாகப் பேசுகின்றன.

இலங்கைத் தீவில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கென்று தனியான பண்பாடு, கலை கலாச்சாரம் உண்டு. அந்த மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் வேறு. வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தோடு மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒப்பிட முடியாது.

ஆனால், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் மூலம் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர். 1920 இல் இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவோடு ஆரம்பித்த தமிழ்- சிங்கள இன மோதல், 1958 ஆம் ஆண்டு கொழும்பில் வன்முறையாக மாறியது. இப்படிக் கொழும்பில் அவ்வப்போது இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறைச் சம்பவங்களின்போது மலையகத் தமிழர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே, வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் மூலம் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர்

அகிம்சைப் போராட்டம் தோல்விகண்ட நிலையில் 1983 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் மலையகத் தமிழர்கள் அதிகளவு பாதிப்புகளை கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் மலையகத்திலும் எதிர்கொண்டிருந்தனர். இன்றுவரைகூட மலையகத் தமிழர்களை நோக்கிய அந்த வன்முறை தொடருகின்றது.

இந்த இடத்திலேதான் பத்திரிகையாளர் வரதன் கிருஸ்ணா எழுதிய நூல் முக்கியம் பெறுகின்றது. இந்த நூல் நான்கு விடயங்களைப் பிரதானப்படுத்துகின்றது.

1) ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தில் மலையகத் தமிழ் இளைஞர்களின் பங்களிப்பு-

2) இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையும் வன்முறையும் இலங்கைத் தமிழர்கள் என்ற அடிப்படையிலானவை. (வடக்குக் கிழக்குத் தமிழர், மலையகத் தமிழர் வேறு என்று தெரிந்தும். தமிழன் என்ற நோக்கிலான திட்டமிடப்பட்ட தாக்குதல்)

3) மலையகத் தமிழர் மீதான ஒடுக்குமுறை என்பது தனியே இலங்கை அரசினால் மாத்திரமல்ல, இலங்கைத்தீவில் வாழ்ந்த ஏனைய சமூகங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது.

4) மலையகத் தமிழ் அரசியல் கட்சிகள், மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் என்ற அடையாளத்தோடு இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குக் கொடுக்கப்பட்ட ஆதரவுத்தளம் பற்றியது.

இந்த நான்கு உள்ளடக்கங்களையும் ஒவ்வொரு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் உணர்ந்துகொள்ள முடியும். மலையக மக்களின் அபிலாஷைகள் 1985 ஆம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுக்களில் பிரதிபலித்திருந்தன. (அங்கேதான் தமிழ்த்தேசியம் என்பது வரையறுக்கப்படுகின்றது)

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களை ஈழத்தமிழர்கள் என்று கூற முடியும். ஏனெனில் ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும். ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது குற்றமாகாது. முன்னைய பாடத்திட்டங்களில் ஈழம் என்றே காணப்படுகின்றது. ஆகவே ஈழத்தமிழர்கள் என்றால் அது பிரிவினையல்ல. தமிழ் ஈழம் என்று சொன்னாலும் அது தனிநாடு அல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியைத் தமிழ் ஈழம் என்று அழைக்க முடியுமென தொல்லியல் ஆய்வாளர்கள பலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

தொல்லியல் ஆய்வாளரான பேராசிரியர் பத்மநாதன், ஈழம் என்ற சொல் ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டதென்கிறார். ஈழம் என்பது இலங்கைத்தீவு முழுவதையும் குறிக்கும் என்கிறார் மற்றுமொரு தொல்லியல் ஆய்வாளரான சிவா தியாகராஜா.

இங்கே வரதன் கிருஸ்ணா எழுதிய இந்த நூலில் மலையகத் தமிழர்களுக்குத் தனித்த அடையாளம் உண்டு என்ற வரலாறும், தனித் தேசிய இனம் என்ற அங்கீகாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதொன்று என்ற தொனி வெளிப்பட்டுகின்றது. (ஆனால் ஈழத்தமிழர்கள் என்பதில் மலையகத் தமிழர்களையும் உள்ளடக்க முடியுமா என்பது விவாதத்துக்குரியது)

குறிப்பாக ஈரோஸ் இயக்கத்தில் மலையக இளைஞர்கள் இணைந்து கொண்டமை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சண்முகதாசனுடன் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளினால் மலையக இளைஞர்கள் கீழைக்காற்று இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, இந்தியாவில் உள்ள நக்சலைட் பாணியில் செயற்பட முற்பட்டமை போன்ற தகவல்களை வரதன் கிருஸ்ணா தனது நூலில் குறிப்பிடுவதன் மூலம் மலையகத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றார்.

சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே கீழைக்காற்று இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை 'கீழைக்காற்று இயக்கம் ஆரம்பமும் முடிவும்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் உள்ளடக்கம் சுட்டி நிற்கின்றது.

சுயநிர்ணய உரிமை தமிழர்களுக்கு உண்டு என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே கீழைக்காற்று இயக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை 'கீழைக்காற்று இயக்கம் ஆரம்பமும் முடிவும்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் உள்ளடக்கம் சுட்டி நிற்கின்றது

இந்த நூலின் ஊடே அன்றும் இன்றும் மலையக அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் பற்றிய வரதன் கிருஸ்ணாவின் பார்வை என்பது, எதிர்கால மலையகத் தமிழச் சமூகத்துக்கான அரசியல் பொருளாதார விடிவுக்கு உகந்ததாக இல்லை என்பதேயாகும். அதற்கான மாற்றத்தின் அவசியத்தையே வரதன் கிருஸ்ணா, தனது கட்டுரைகள் மூலமாகச் சொல்லாமல் சொல்கிறார்.

இறுதியாக ஒன்றைச் சுட்டிக்காட்டுவது எனது கடமை.

வரதன் கிருஸ்ணாவின் இயற்பெயர் பெயர் ஆறுமுகம் வரதராஜா, ஆனால் வரதன் என்ற பெயர் ஈரோஸ் இயக்கத் தலைவர் மறைந்த பாலகுமாரன் அவர்களினால் சூட்டப்பட்து. பின்னால் வரும் கிருஸ்ணா என்ற பெயர், ஈரோஸ் இயக்கத்தின் மூத்த தோழர் கிருஸ்ணாவினுடையது. அவர் உயிரிழப்பதற்கு முன்னரே கிருஸ்ணா என்ற பெயரை வரதன் சூட்டிக்கொண்டமை, சமூக மாற்றத்திற்கான வரதனுடைய சிந்தனை வெளிப்பாட்டையே உணர்த்துகிறது.

-அ.நிக்ஸன்-