அனுராதபுரம் சிறைச்சாலையில்

தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மன்னார் மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை
பதிப்பு: 2021 ஒக். 19 10:01
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 22 20:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் மேல் நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றம் ஆகியன அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.
 
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சிவசுப்பிரமணியம் தில்லைராஜா என்பவரின் வழக்கு விசாரணை கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது குறித்த வழக்கின் சந்தேகநபரான சிவசுப்பிரமணியம் தில்லைராஜா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே. எஸ் ரட்ணவேல் முன்னிலையாகினார்.

இந்த நிலையில் மன்னார் மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தொடர்பான வழமையான விசாரணைகளுக்கு, மேலதிகமாக அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீதான அத்தூமீறல் மற்றும் கொலை அச்சுறுத்தல் தொடர்பான சமர்ப்பணமொன்று சட்டத்தரணி கே. எஸ். ரெட்ணவேலினால் மன்னார் மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

குறித்த சமர்ப்பணத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கே. எஸ்.ரெட்ணவேல் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மேல் நீதிமன்றம் , அனுராதபுரம் சிறைச்சாலையில் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயினால் தமிழ் அரசியல் கைதிகள் மிரட்டப்பட்ட சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை மன்னார் மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றமும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும், அத்துடன் இலங்கை குற்றவியல் சட்டத்தின்படி பாரிய குற்றச் செயலில் இராஜாங்க அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் மன்னார் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ள தனது சமர்ப்பணத்தில் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதிமன்றில் அவர் முன்வைத்த சமர்ப்பணம் குறித்து ஊடகங்களுக்கும் அவர் விவரம் தெரிவித்தார். சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரெட்ணவேல் தனது சமர்ப்பணம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது-

சிவசுப்பரமணியம் தில்லைராஜா எனும் தமிழ் அரசியல் கைதி அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருடன் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதியைச் சேர்ந்த மேலும் 14 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் ஐந்து பெண் தமிழ் அரசியல் கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அதீத மதுபோதையில் சிறைச்சாலை அதிகாரிகளை தனது அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.

அன்றைய தினம் குறித்த சிறைச்சாலையின் சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளை வெளியில் அழைத்து வரும்படி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இச்சமயம் இராஜாங்க அமைச்சரின் உத்தரவிற்கு அடிபணிந்த சிறை அதிகாரிகள் சிறைச்சாலையின் உள்ளே தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 தமிழ் அரசியல் கைதிகளை வெளியே அழைத்து வந்து இராஜாங்க அமைச்சர் முன்னிலையில் நிறுத்தியுள்ளனர்.

இச்சமயம் இராஜாங்க அமைச்சர் அதிக போதையுடன் இருந்ததாக கைதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்ட கைதிகளை இராஜாங்க அமைச்சர் ஆபாச வார்த்தைகளினால் திட்டியதுடன் அவர்களை முழந்தாளிட்டு அமருமாறு நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். இதையடுத்து அச்சம் காரணமாக கைதிகள் முழந்தாளிட்டு அமர்ந்ததின் பின் கைதிகளை ஒவ்வொருவராக அழைத்த இராஜாங்க அமைச்சர் "நீ இராணுவத்ததினரை கொலை செய்தாயா?" என அச்சுறுத்தும் பாணியில் கைதிகளிடம் கேட்டுள்ளார்.

இச்சமயம் மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெறும் வழக்கொன்றில் தொடர்புடைய சிவசுப்பிரமணியம் தில்லைராஜாவை அழைத்த இராஜாங்க அமைச்சர் நீ யாரைக் கொலை செய்தாய் என வினவியுள்ளார். இச்சமயம் குறித்த சுப்பிரமணியம் தில்லைராஜா தனக்கு சிங்களம் தெரியாது என தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் அழைக்கப்பட்டு மொழிபெயர்த்து சொல்லப்பட்டது.

அப்பொழுது குறித்த அரசியல் கைதி நான் கொலை ஒன்றும் செய்யவில்லை என்றும் தனக்கு ஒரு வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் போது இராஜாங்க அமைச்சர் குறித்த கைதியை ஆபாச வார்த்தைகளினால் பேசியுள்ளார்.

பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏனைய கைதிகளையும் அமைச்சர் தகாத வார்த்தைகளினால் ஏசியுள்ளார்.

இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர், இன்னுமொரு தமிழ் கைதியை அழைத்து அவருடைய தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் அங்கு சிறைச்சாலை அதிகாரிகளினால் தன் முன் நிறுத்தப்பட்ட அனைத்து தமிழ் கைதிகளிடம் "நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனிவாக்கும் முறைப்பாடுகள் அனுப்பியிருக்கின்றீர்கள் ஆனால் அங்கு ஒன்றும் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம்" என மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தனக்கு அமைச்சர் பதவியை வழங்கும் போது நீ சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அவர்களை விடுதலையும் செய்யலாம் அல்லது ஒழித்துக் கட்டவும் முடியும். அதற்கான அதிகாரத்தை தருகின்றேன் என்று சொல்லித்தான் எனக்கு சிறைச்சாலை அமைச்சர் பதவியை ஜனாதிபதி வழங்கினார்.

எனவே உங்களை நான் எதுவும் செய்யலாம். நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடுகள் எதையும் செய்யக்கூடாது. என்று கூறியவாறு தமிழ் கைதி ஒருவரின் தலைமீது கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தியபோது அங்கு நின்ற சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு இராஜங்க அமைச்சரை சமாதானம் செய்து வெளியே அழைத்து வந்துள்ளனர். மேலும் இன்றைய தினம் (13ம் திகதி) மன்னார் மேல் நீதிமன்றில் தான் முன்வைத்த சமர்ப்பணத்தில் இவ்விடயங்கள் அனைத்தையும் தெரிவித்ததாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு உள்ளாகியுள்ளார். ஏனெனில் சிறைக்கைதிகள் அனைவரும் நீதிமன்றங்களின் உத்தரவின் பேரிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிறைகளில் தண்டனை அனுப்பவிப்பவர்கள் கூட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே தண்டனை பெற்று இருக்கின்றார்கள். இவ்விதம் சிறைச்சாலையில் உள்ள அனைவரும் நீதிமன்றின் கட்டளைக்கு உட்பட்டுத்தான் இருக்கின்றார்கள். எனவே நீதிமன்றம் தான் சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானவர்கள்.

சிறைச்சாலை ஒரு அரச ஸ்தாபனமாக இருந்தாலும் அங்கு கைதிகளை தடுத்து வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் அதற்கு பொறுப்பாக இருக்கின்றது.

இந்த நிலையில் சிறைக்கைதிகளை யாராவது துன்புறுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ அல்லது வேறு எந்த வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தினாலோ அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உள்ளாக்குகிறார்கள். இவ்வாறான நிலையில் இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள் எனும் அடிப்படையில் நீதிமன்றம் இவ்விடயத்தை கையாளவேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக நீதிமனறம் ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் இலங்கையில் சாதாரண ஒரு மனிதர் இன்னுமொருவரின் தலையில் துப்பாக்கி வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தால் அவர் உடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறான செயலை மேற்கொண்டு இலங்கை குற்றவியல் சட்டத்தின் படி ஒரு பாரிய குற்றத்தை இழைத்துள்ளார்.

ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்ததின் மூலம் ஒருவரை கொலை செய்ய எத்தனித்தமை என்ற குற்றத்தையும் அவர் மீது சாட்டலாம். எனினும் அவர் அதிகாரம் படைத்த அரசியல்வாதி என்றபடியால் சிறைச்சாலை அதிகாரிகள் கூட அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் அச்சம்பவத்தையும் அவர்கள் தடுக்க முனையவில்லை. எனினும் நீதிமன்றுக்கு இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடரபாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு சட்டரீதியாக அழைக்கப்படவேண்டும். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டவரும், நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு அவருடைய சாட்சியமும் பதிவு செய்யப்படல் வேண்டும். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் எந்த ஒரு சிறைச்சாலைக்கு செல்வதற்கு சிறைச்சாலை சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை ஐந்தரை மணியில் இருந்து மாலை ஐந்தரை மணிவரைக்கும் இவர்கள் சிறைக்கு சென்று பார்வையிட முடியும். எனினும் குறித்த இராஜாங்க அமைச்சர் அன்றைய தினம் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றது மாலை ஆறு மணிக்கு பின்னராகும். அனுராதபுரம் சிறைச்சாலையில் அன்றைய தினம் கைதிகளின் இடாப்பில் பெயர்கள் சரி பார்க்கப்பட்டு சிறைக்கூடங்களில் கைதிகள் அடைக்கப்பட்ட பின்னர் குறித்த அமைச்சர் அங்கு சென்று கைதிகளை வெளியில் அழைப்பித்து அவர்களை அச்சுறுத்தியது மாபெரும் குற்றமாகும்.

இதன் அடிப்படையில் நீதிமன்றம் இவ்விடயத்தில் தகுந்த விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என தான் கடந்த 13ஆம் மன்னார் மேல் நீதிமன்றில் முன்வைத்த தனது சமர்ப்பணத்தில் தெரிவித்தாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் மேலும் தெரிவித்தார்.