வடமாகாணம்

மன்னார் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு

தனவந்தர்களும் காதர் ஹாஜீயார் அமைப்பும் இணைந்து ஏற்பாடு
பதிப்பு: 2021 ஒக். 23 20:18
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 29 20:18
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட பல வைத்திய உபகரணங்கள் மற்றும் விலையுயர்ந்த அத்தியாவசிய உயிர் காக்கும் கருவிகள் ஆகியன எருக்கலம்பிட்டி தனவந்தர்கள் மற்றும் "காதர் ஹாஜீயார்" எனும் அமைப்பினரால் கடந்த திங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் எருக்கலம்பிட்டி மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதியும் மனித உரிமை அமைப்புகளின் ஆர்வலருமான எம்.ஏ.சி. கமால்தீனின் அயராத முயற்சி எடுத்திருந்தார்.
 
இதன் காரணமாக எருக்கலம்பிட்டி தனவந்தர்கள் மற்றும் காதர் ஹாஜியார் நிதியத்தினர் ஆகியோர்களின் நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி உபகரணங்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் கே.செந்தூரபதிராஜா மற்றும் வைத்தியசாலை பிரதம முகாமைத்துவ சேவை அலுவலர் எஸ். என். எம். ஏ. சஜானி ஆகியோர்களிடம் குறித்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டது. மேலும் குறித்த நிகழ்வில் எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உப தலைவர் அப்துல் காதர் முஸாதீக், செயலாளர் அப்துல் கரீம் பஸ்மி, உறுப்பினர் ஜெமீன் அத்ஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் (மெசிடோ) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நோய் நிலை கண்காணிப்புத் திரை மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை அன்பளிப்பு செய்துள்ளது. மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குத் தேவையான ஒரு தொகுதி போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் பொதிகளையும் மேற்படி அமைப்பு அன்பளிப்பு செய்தது.

குறித்த உபகரணங்கள் மற்றும் குடிநீர் போத்தல்களை மன்னார் மாவட்ட பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.செந்தூரபதிராஜாவிடம் அண்மையில் கையளித்தார்.