மாவீரர் நாளை முன்னிட்டு

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் படையினர் குவிப்பு

வீதிகளில் வழிமறித்துச் சோதனை
பதிப்பு: 2021 நவ. 23 22:28
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 25 20:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்பதால், இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் குறித்த ரோந்து நடவடிக்கைகளையும், சோதனை நடவடிக்கைகளையும் மேற்படி மாவட்டங்களில் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பிரதான வீதி, மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி மற்றும் முருங்கன்-சிலாவத்துறை ஊடான புத்தளம் பிரதான வீதி ஆகியவற்றில் பல இடங்களில் தற்காலிக வீதி தடைகளை ஏற்படுத்தி வாகனங்களும் அதில் பயணிக்கும் பொதுமக்களும் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேற்படி சோதனை நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரும் மன்னார் கடற்பரப்பில் தமது ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பிரதான வீதி, பூநகரி- யாழ்ப்பாணம் பிரதான வீதி மற்றும் ஸ்கந்தபுரம் , முழங்காவில் வீதிகளில் பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தில் யாழ்ப்பாணம் ஏ- 9 பிரதான வீதி, ஹொரவப்பொத்தானை பிரதான வீதி, மன்னார் வீதி ஆகியவற்றில் பயணிக்கும் வாகனங்கள் பொலிஸாரின் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள பல தமிழ் கிராமங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன் அப்பகுதிகளில் அவர்கள் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேற்படி மூன்று மாவட்டங்களிலும் வசிக்கும் மாவீரர் குடும்பங்களையும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இரகசியமாக கவனித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

இலங்கையின் தமிழர் தாயகமான வட கிழக்கு மாகாணங்களில் கடந்த வருடத்தை விட இவ்வருடம் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்தி வருவதுடன் அதனைத் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வட மாகாணத்தின் மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.