வடமாகாணத்தில்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை

மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் கவலை
பதிப்பு: 2021 நவ. 23 22:36
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 25 19:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாண மீனவர்கள் அண்மையில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்பு இயற்கை அனர்த்தம் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது மீன்பிடி வள்ளங்கள் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன சேதமடைந்து பல பாதிப்புகளுக்கும் கடுமையான பொருளாதாரக் கஷ்டங்களுக்கும் தினசரி முகம் கொடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு இதுவரை ஒரு சதம் பணம் கூட நஷ்ட ஈடாக வழங்கப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம். ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்கள் நலன் தொடர்பில் எவ்வித நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் என்.எம். ஆலம் மேலும் குறிப்பிட்டார். குறிப்பாக இன்றைய அரசாங்கம் மீனவர் சமூகத்தை குறிப்பாக வட மாகாண தமிழ் பேசும் மீனவர்களைக் கண்டுகொள்வதே இல்லை என மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் என். எம். ஆலம் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களாக மன்னார் மாவட்ட மீனவர்கள் உட்பட முழு வட மாகாண மீனவர்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக பல விடயங்களை தெரிவித்திருந்தோம்.

அத்துடன் அப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசிற்கும் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். எனினும் எத்தரப்பும் அதையிட்டு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என எம்.ஏ. ஆலம் மேலும் தெரிவித்தார்.

தற்போது அரிசி, கோதுமை மா பால் மா சீனி உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது.

எனினும் மீனவர்கள் மிகுந்த உடல் பிரயாசைகளுக்கு மத்தியில் பிடிக்கும் மீன்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது அதே விலையிலேயே அவை காணப்படுகிறது. எனவே மீனவர்களின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கவேண்டும்.

மேலும் இந்திய மீனவர்களால், அண்மைக் காலங்களாக எமது வட பகுதி மீனவர்களின் உடமைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் பல மில்லியன் ரூபா ஆகும். எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட வட பகுதி மீனவர்களுக்கு ஒரு சதம் கூட இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே வட பகுதி மீனவர்களின் ஏழ்மையைப் போக்கி அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு இலங்கை அரசு அல்லது தொண்டு நிறுவனங்களாவது முன்வரவேண்டும்.

மேலும் அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் நிதி மூலங்களைப் பெற்று மீனவர்களுக்கான தனியான ஒரு செயல்பாட்டை முன்னெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எம்.ஏ. ஆலம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.