யாழ்ப்பாணத்தில் புளொட், ரெலோ உள்ளிட்ட கட்சிகள் கூடிப் பேசிய நிலையில்

13 ஐ ஏற்க முடியாதென கோட்டாபய சிங்கள எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார்

லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்
பதிப்பு: 2021 நவ. 24 14:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 25 19:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்திச் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரி வரும் நிலையில், 13 ஐ ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தரப்பு தமக்கு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் மூத்த அரசியல்வாதியுமான லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளார். ஒரு புறம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனச் சொல்லிக் கொண்டு மறுபுறத்தில் 13 ஐ ஏற்க முடியாதெனக் கூறுவதாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற விவாதத்தில் அவர் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.


 
ரணில், மைத்திரி அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அனைத்துச் சுயாதீனத் தன்மைகளும் 20 ஆம் திருத்தத்தின் மூலமாக பறிக்கப்பட்டுள்ளதென்றும் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் கோரிக்கையைக் கூட நிராகரிக்கும் அதிகாரம் சுயாதீன ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அதன் சுயாதீனம் அழிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அனைத்தும் 20 ஆம் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன.

அதிகார பரவலாக்கல் இன்னமும் செய்யப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. எனவே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திலேனும் இவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தெரிவுக்குழும் உருவாக்கப்பட வேண்டும். மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் தெரிவுக் குழு உருவாக்கப்பட்டே புதிய அரசியல் யாப்புக்கான பரிந்துரைகள் பெறப்பட்டன.

ஆனால் இன்று ஜனாதிபதி என்ன செய்கின்றார். தனது தனிப்பட்ட சட்டத்தரணிகள் மூலம் அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளை உருவாக்கி வருகிறார். இவ்வாறு செயற்பட்டால் இந்த அரசியல் யாப்பை வர்த்தமானி போன்று மீளப் பெற்றுக்கொள்ள வேண்டி நிலை ஏற்படும் என்று லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டேலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ரெலோ, புளொட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையிலேயே லக்ஸ்மன் கிரியெல்ல 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஜனாதிபதியின் நிலைப்பாட்டை பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழு ஒன்றும் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு கலந்துரையாடியிருந்தது.

13 ஆவது திருத்தச் சட்டம் வினைத்திறன் கொண்டதென கொழும்பில் இருந்து வெளிவரும் தி ஐலண்ட் என்ற ஆங்கில நாளிதழில் (28.12.2020) கட்டுரை எழுதிய கலாநிதி நிர்மலா சந்திரகாசன், அமெரிக்காவுக்குச் சென்ற குழுவில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.