இலங்கை ஒற்றையாட்சி அரசின்

அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக மகிந்த சமரசிங்க

சமாதானப் பேச்சுக்களின்போது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்தவர்
பதிப்பு: 2021 நவ. 25 09:04
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 26 16:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பொதுஜனப் பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மகிந்த சமரசிங்க பதவியேற்கவுள்ளார். தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு இன்று வியாழக்கிழமை அனுப்பிவித்த மகிந்த சமரசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தித்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
அமெரிக்காவுக்கான புதிய தூதவர் ஒருவரை நியமிக்கும் விடயத்தில் கடந்த சில மாதங்களாக முக்கிய உரையாடல்களில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படும் புதிய பிரேரணையைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.

மகிந்த சமரசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஆனால் 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான மறைமுகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்.

சமாதானப் பேச்சுக்கான இணைத்தலைமை நாடுகளின் ரோக்கியோ மாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகவும், அந்த மாநாட்டில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பங்குகொள்ள முடியாத அல்லது புலிகளின் பிரதிநிதிகள் தாங்களாகவே விலகிச் செல்லக்கூடிய புறச் சூழலை உருவாக்கும் இராஜதந்திர நகர்வுகளை நாசூக்காக முன்னெடுத்திருந்தவர் மகிந்த சமரசிங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.