வடமாகாணம்

மன்னார் பிரதேச சபை விவகாரம்- முறையீட்டை நீதிமன்றம் நிராகரிப்பு

விசாரணைக்கு முன்னரே தீர்ப்பு
பதிப்பு: 2021 டிச. 17 19:44
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 17 20:46
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர் நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாணம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவினை மேலும் நீடிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், வட மாகாண ஆளுநரினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக, அவரினால் இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் வழக்கு விசாரணைகள் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
 
இந்த நிலையிலேயே மேல் முறையீட்டு நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மேற்படி இடைக்காலத் தடை உத்தரவினை நீக்கம் செய்துள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் மூன்றாம் திகதி புதனன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

வட மாகாண முன்னாள் ஆளுநரினால் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சாகுல் ஹமீட் முகம்மது முஜாஹீர், அவரின் பல்வேறு ஒழுங்கீனங்கள் மற்றும் தகுதியின்மை காரணமாக, பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் தவிசாளரினால், வட மாகாண ஆளுநருக்கு எதிராக இலங்கை மேல் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு (Writ of Mandamus) தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுதாரர் தனது ரிட் மனுவில் பிரதிவாதிகளாகக் அன்றைய வட மாகாண ஆளுநர் திருமதி பியன்சியா சறோஜினிதேவி மன்மதராசா சார்ள்ஸ் மற்றும் சட்டா மா அதிபர், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மன்னார் மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர், மன்னார் பிரதேச சபை செயலாளர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என ஏழு தரப்பினர்களைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த றிட் மனு தொடர்பான முதலாவது வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெற்றவேளை, மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் இம்மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை வரை இடைக்காலத் தடை உத்தரவினை பிறப்பித்திருந்தது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகளை அக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கும் கடந்த மாதம் 29ஆம் திகதி மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. இவ்வாறான நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் மனு மீதான விசாரணைகள் நடைபெற்றவேளை அன்றைய தினம் பிரதிவாதிகள் சார்பான விளக்கத்தையும் முன்வைக்குமாறும் மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளரின் குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றவேளை, மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் நியமனத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக, வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் ஏலவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மேலும் நீடிப்பதற்கு மனுதாரரின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். எனினும் மேற்படி கோரிக்கையை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் மனுதாரரினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் ( Writ of Mandamus) முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வட மாகாண ஆளுநர் திருமதி பியன்சியா சறோஜினிதேவி மன்மதராசா சார்ள்ஸ் தற்போது வட மாகாண ஆளுநர் பதவியில் இல்லாததினால் வட மாகாணத்தின் புதிய ஆளுநரை பிரதிவாதியாக குறிப்பிட்ட புதிய மனுவினை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேவேளை குறித்த மனுவில் ஐந்தாம் மற்றும் ஆறாம் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள மன்னார் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் மன்னார் பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக் ஆகியோர் மேல் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகினர்.

அத்துடன் மன்னார் பிரதேச சபைக்கு தெரிவான புதிய தவிசாளர் குறித்த பதவியை இதுவரை ஏற்காததினால் மேற்படி பிரதேச சபையின் நிருவாகத்தை திறம்பட மேற்கொள்ள முடியாதுள்ளதை குறித்த இரண்டு சட்டத்தரணிகள் மேல் முறையீட்டு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.