வடமாகாணம் மன்னாரில்

அரச திணைக்களங்களிடம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் தொடர்பாக இறுதி முடிவு

அரச அதிபர் தகவல்
பதிப்பு: 2021 டிச. 18 21:52
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 21 09:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு காணப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கீழுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பங்குபற்றிய கலந்துரையாடலொன்று, கடந்த 16ஆம் திகதி வியாழன் காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலின் போதே மன்னார் மாவட்ட மக்களுக்குச் சொந்தமான காணி தொடர்பான பிணக்குகளுக்கு எதிர்வரும் ஐனவரி மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவிடம் பல கருத்துகளை முன்வைத்ததாக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி டி மெல் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி, மடு மற்றும் மன்னார் நகர் ஆகிய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் பொதுமக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவு காணிகளை வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களங்கள் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் மேற்படி திணைக்களங்கள் குறித்த காணிகளில், அறிவித்தல் பலகைகளை நிறுவியுள்ளதுடன் எல்லைக் கற்களையும் நாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் நெற்செய்கைக்கான வயல் நிலங்கள், தோட்டச் செய்கைக்கான மேட்டு நிலங்கள், குடிநிலக்காணிகள் மற்றும் ஏனைய பயன்பாட்டுக்குத் தேவையான காணிகள் என பொதுமக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணிகள், இலங்கை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் , வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீள வழங்குமாறு காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாண மாவட்டங்களில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பில் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு ஏற்ப வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க மன்னார் வருகை தந்து குறித்த காணிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.