தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்

தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு மாறான அரசியல் தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாது- தமிழரசுக் கட்சி

கொழும்பில் நடந்த கூட்டத்தில் முடிவு- நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்புவது தொடர்பான ரெலோவின் கூட்டம் நாளை
பதிப்பு: 2021 டிச. 20 23:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 21 10:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு மாறான அரசியல்தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாதென தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இன்று முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் பின்னர் மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு பதினொரு மணிவரையும் இரு கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக் கட்சி கூறியுள்ளது. கொழும்பு- 07இல் உள்ள தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, மூத்த உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிறிதரன், சுமந்திரன், கலையரசன். சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய சந்திப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான குழுவின் அமெரிக்கச் சுற்றுப் பயணம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் இடம்பெறும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த கூட்டங்கள் தொடர்பாகவும் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது கூட்டத்தில் பங்குபற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

13 ஐ நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடியிடம் கோருவது தொடர்பான கடிதத்தில் கையொப்பம் இடுவதா இல்லையா என்பது குறித்து எதுவுமே கூறப்படவில்லை. ஆனால் நாளையை கூட்டத்தில் பங்குகொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை ரெலோவின் ஏற்பாட்டில் மூன்றாவது கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் அணியும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி அனுப்பவுள்ள கடிதத்தில், கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடுவார்கள் எனவும் ரெலோ இயக்கம் அறிவித்துள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது கட்டமைக்கப்பட்டவை- மக்களிடம் இருந்து கீழிருந்து மேலாகக் கட்டமைக்கப்பட்டவை அல்ல. மக்களுக்குத் தெரிவுகள் கொடுக்கப்படாமல் மேலிருந்து கீழாகத் தலைமைகள் எடுக்கின்ற முடிவுகளை தேர்தல் விஞ்ஞாபனமாக அறிவித்து விட்டு அதனை மக்கள் ஏற்றுக் கொண்டவர்கள் அதற்குத்தான் மக்கள் வாக்களித்தவர்கள் என்று சொல்வது அடிப்படையில் தவறானது.

அதேவேளை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன உள்ளடக்க வேண்டும் என்பது தொடர்பாகக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுடன் உரையாட வேண்டும். அதாவது பிரதேசவாரியாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள கட்சி உறுப்பினர்களோடும் மக்களோடும் உரையாடி அதன் பின்னர் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருந்தால், அதற்கு மக்கள் ஆணை வழங்கியதாகக் கருத முடியும்.

ஆகவே யாரோ ஒரு சிலர் எழுதுகின்ற, கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் இன்றித் தயாரிக்கப்படுகின்ற தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு மக்கள் ஆதரவு வழங்கியதாகத் தமிழரசுக் கட்சி சித்தரிப்பது அடிப்படையில் தவறு.

ஆகவே தமிழரசுக் கட்சி இந்த விடயங்களைப் புரிந்துகொண்டு அல்லது தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முடியுமெனக் கூறியிருப்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆழமான கருத்தல்ல.

அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கம் என்று கருதக்கூடிய முறையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் பொருள் விளக்கமும் அமைந்துள்ளது.

ஆகவே செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கோருவதற்கும், தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படுமெனத் தமிழரசுக் கட்சி கூறுவதற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் மாத்திரமே உண்டு.

ஆகவே அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான சமஸ்டி ஆட்சியைத் தமிழரசுக் கட்சி கோருகின்றதா அல்லது இலங்கை ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பரவலாகத்தைக் கொண்ட சமஸ்டி ஆட்சியைக் கோருகின்றதா என்பது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.