மோடியிடம் கையளிப்பதற்குக்காக

ரெலோ இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தவறு! திசை திருப்பினாரா சுமந்திரன்?

புதிய வரைபை தயாரிக்க புதிய குழுவும் நியமனம் - கைச்சாத்திடும் நிகழ்வு தாமதம்
பதிப்பு: 2021 டிச. 21 22:30
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 22 01:31
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணம் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் தயாரித்த அந்த ஐந்து பக்க ஆவணம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் இன்று அனைத்துக் கட்சிகளும் கையொப்பமிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் இன்றை கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு சில விளக்கங்களைக் கொடுத்த பின்னர் குறித்த ஐந்து பக்க ஆவணத்தை மீளத் தயாரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த ஆவணத்தில் வரலாற்றுத் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் புதிய வரபைத் தயாரிக்கும் குழுவில் தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் உள்ளடப்பட்டுள்ளனர்.

நாளை புதன்கிழமை அல்லது நாளை மறுதினம் வியாழக்கிழமை புதிய வரைபு தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்டவுள்ள வரைபை வாசித்து அறிந்தபின்னரே கையொப்பமிடுவதென கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றியிருந்த இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சம்பந்தனுடன் பங்குபற்றிய சட்டத்தரணி சுமந்திரன், ரெலோ இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் வரலாற்றுத் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி புதிய ஆவணம் தயாரிப்பதற்கு ஏற்ற முறையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

ஆனாலும் திட்டமிட்டபடி நாளை அல்லது நாளை மறுதினம் குறித்த ஆவணத்தில். தமிழ், முஸ்லிம் கட்சிகள் கைச்சாத்திடும் சாத்தியம் இல்லையென உள்ளக வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும் தமிழ் மக்கள் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு மாறான அரசியல்தீர்வு முயற்சிகளை ஏற்க முடியாதென சட்டத்தரணி சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்துாயாடல் ஒன்றில் அறிவித்திருந்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான அரசியல் தீர்வு தொடர்பாகவும் அவர் கூறியிருந்தார். இந்தவொரு நிலையில் இன்று இடம்பெற்ற 13 பற்றிய கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரன் புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் குழுவிலும் உள்ளடங்கியுள்ளார்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சொல்லிவருகின்ற விஞ்ஞாபனங்கள் எதுவும் குறித்த கட்சிகளின் பங்குபெறும் ஜனநாயக (participatory democracy) முறையில் அடிமட்டத்திலும், பிரதேச மற்றும் மாகாண வாரியாகவும் பிரேரிக்கப்பட்டு, உறுப்பினர்களால் சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிப்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல.

அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசும், ஆறாம் சட்டத்திருத்தத்தின் ஊடாக அரசியல் வேணவா குறித்த தெரிவுக்கான சுய நிர்ணய உரிமைச் சுதந்திர வெளியைக் கட்டுப்படுத்தியுள்ளது.

மக்களுக்குத் தெரிவுகள் கொடுக்கப்படாமல் மேலிருந்து கீழாகத் தலைமைகள் எடுக்கின்ற முடிவுகளைத் தேர்தல் விஞ்ஞாபனமாக அறிவித்துவிட்டு அதனை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் அதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று சொல்வது அடிப்படையில் தவறானது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன உள்ளடக்க வேண்டும் என்பது தொடர்பாகக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுடன் உரையாட வேண்டும். அதாவது பிரதேசவாரியாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள கட்சி உறுப்பினர்களோடும் மக்களோடும் உரையாடி அதன் பின்னர் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருந்தால், அதற்கு மக்கள் ஆணை வழங்கியதாகக் கருத முடியும்.

ஆகவே யாரோ ஒரு சிலர் எழுதுகின்ற, கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் இன்றித் தயாரிக்கப்படுகின்ற தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு மக்கள் ஆதரவு வழங்கியதாகத் தமிழரசுக் கட்சி சித்தரிப்பது அடிப்படையில் தவறு.

தமிழரசுக் கட்சி இந்த விடயங்களைப் புரிந்துகொண்டு அல்லது தெரிந்தும் தெரியாதவர்கள் போன்று தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முடியுமெனக் கூறியிருப்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆரோக்கியமான கருத்தல்ல.

அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கம் என்று கருதக்கூடிய முறையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் பொருள் விளக்கமும் அமைந்துள்ளது.

ஆகவே செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கோருவதற்கும், தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படுமெனத் தமிழரசுக் கட்சி கூறுவதற்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் மாத்திரமே உண்டு.

ஆகவே அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான சமஸ்டி ஆட்சியைத் தமிழரசுக் கட்சி கோருகின்றதா அல்லது இலங்கை ஒற்றையாட்சியின் கீழான அதிகாரப் பரவலாகத்தைக் கொண்ட சமஸ்டி ஆட்சியைக் கோருகின்றதா என்பது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

ஆனால், இன்றைய கூட்டத்தின் பெறுபேறாக, அடுத்தகட்ட சிக்கலுக்குப் பொறுப்பாளிகளாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அனைவரும் கொள்கை ரீதியாக வழுவற்போக்குடையவர்கள் என்ற கருத்து அரசியல் அவதானிகளிடையே உள்ளது. ஆகவே, பெரிய அளவில் தமிழ்த் தேசியத்துக்குப் பலம் சேர்க்கும் ஆவணம் ஒன்றை இவர்களாலும் தயாரிக்க இயலாது என்பதே அவதானிகளின் கருத்தாக, கவலையோடு நோக்கப்படுவதாக இருப்பதே உண்மையாகிறது.