அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே

பசில் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த விஜயதாச

சீனாவை எதிர்க்கத் தகுதியில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்
பதிப்பு: 2021 டிச. 27 22:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 29 01:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சீனாவை எதிர்த்து நிற்கும் சக்தி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க- இந்திய அரசுகளின் உதவியை எதிர்பார்க்கும் இந்த அரசாங்கத்துக்கு சீனாவை நேரடியாக எதிர்க்கத் தகுதியில்லை என்றும், சீனாவின் கடன் பிடிக்குள் சிக்குண்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முரண்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தரப்பில் தனித்துச் செயற்பட்டு வரும் விஜயதாச ராஜபக்ச. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்தார்.
 
கொழும்பில் உள்ள தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு இன்று திங்கட்கிழமை சிறப்பு நேர்காணல் வழங்கிய விஜயதாச ராஜபக்ச, அரசாங்கத்தின் நிதிக் கொள்கை தவறானதென்று கூறினார்.

அமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைக்கின்ற தீர்மானங்கள் அனைத்தும் பாதகமானது என்றும் அவருடைய ஆணவமே பங்காளிக் கட்சிகள் முரண்படுவதற்குக் காரணம் எனவும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.