இலங்கைத்தீவின்

வடமாகாணத்தில் இந்திய மீனவர்கள் 2009 இற்கு முன்னர் அத்துமீறியதில்லை

முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூறுகிறார்
பதிப்பு: 2022 ஜன. 12 16:54
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஜன. 14 06:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் தாயகமான வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லை. இந்தநிலையில் அக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக தமது கடற்றொழிலை மேற்கொண்டு பொருளாதார ரீதியில் மிகவும் உயர்வான நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்ந்ததாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபடுவதினால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து கூர்மை செய்தித் தளத்திற்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

இறுதி யுத்தத்திற்கு முன்னைய காலகட்டங்களில் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் என்றுமே நிகழ்ந்ததில்லை.

அத்துடன் முல்லை மாவட்ட மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளை கண்ணுற்றதுமில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக முல்லைத்தீவு மீனவர்கள் அவர்களின் கடற்பரப்பில் தமது மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இவ்வகையில் கடற்றொழிலில் ஏனைய தரப்பினரின் குறுக்கீடு இல்லாததினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தமது மீன்பிடி மூலமாக பொருளாதார ரீதியில் மிகவும் உயர்வான நிலையில் இருந்தனர்.

எனினும் இறுதி யுத்தத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் திங்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலேயே இந்திய மீனவர்களின் வருகை காணப்பட்டது.

எனினும் அண்மைக்காலங்களில் கால நேரம் வர்த்தமானம் எதுவுமின்றி முல்லைத்தீவு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். மேலும் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் நுழைந்து அதனை முற்றாக துவம்சம் செய்கின்றது. இந்த நிலையில் இந்திய மீனவர்கள் வருகை தராத நாட்களிலேயே முல்லைத்தீவு மீனவர்கள் கடற்றொழில் ஈடுபட முடிகின்றது.

எமது கடற்பரப்பை இந்திய மீனவர்கள் தமது இழுவை மாடிகளை(வலைகள்) பயன்படுத்தி கபளீகரம் செய்வதினால் முல்லைத்தீவு மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் இவர்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இழுவை படகுகள் மூலம் இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தமது பாராம்பரிய தொழிலான மீன்பிடியைக் கைவிட்டு வேறு தொழில்களுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலால் உள்ளூர் தேவைகளுக்கே மீன் பற்றாக்குறையாக உள்ளது. மன்னார் மற்றும் திருகோணமலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நகருக்கு மீன்கள் எடுத்துவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரும் கடல் வளம் கொண்ட வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்தூமீறலை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சரோ, அல்லது தமிழ் அரசியல்வாதிகளோ இதுவரை காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிங்கராசா பிரதாஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.