வடமாகாணம்

மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல்- சந்தேக நபர்களை முன்னிலையாகுமாறு உத்தரவு

சட்ட மா அதிபர் சார்பான அரச சட்டத்தரணியும் சமுகமளிக்க வேண்டுமெனப் பணிப்பு
பதிப்பு: 2022 ஜன. 15 20:48
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 16 19:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் வடமாகாணம் மன்னார் மாவட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் மேல் நீதிமன்றில் கடந்த 11ஆம் திகதி செவ்வாயன்று நடைபெற்ற சமயம், குறித்த வழக்கில் தொடர்புடைய 53 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மன்னார் மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அன்றைய தினம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்ட மா அதிபர் சார்பான அரச சட்டத்தரணியையும் நீதிமன்றில் பிரசன்னம் ஆகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
 
மன்னார் நீதிமன்ற கட்டிடத் தொகுதி கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி காலை 10 மணியளவில் வன்முறை கும்பலொன்றினால் தாக்குதலுக்கு இலக்காகியது.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், வர்த்தகர்கள், மீனவர்கள் உட்பட 55 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைதாகியவர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சுமார் 100 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதன் பின்னர் குறித்த 55 சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சட்ட மா அதிபரானால் குறித்த வழக்கு, விரிவான விசாரணைகளுக்காக, மன்னார் மாவட்ட நீதிமன்றில் இருந்து மன்னார் மேல் நீதிமன்றிற்கு கடந்த 2013ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே மேற்படி வழக்கின் விசாரணைகள் கடந்த செவ்வாய்கிழமை 11ஆம் திகதியன்று மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்ற சமயம் குறித்த வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபர் சார்பில் மன்னார் மேல் நீதிமன்றில் பிரசன்னமாகும் அரச தரப்பு சட்டத்தரணி வருகை தராததினால், குறித்த வழக்குத் தவணையை எதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 திகதிகளுக்கு மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

அத்துடன் குறித்த வழக்கின் சந்தேக நபர்களாக ஆரம்பத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட 55 நபர்களில் இருவர் அண்மைக்காலங்களில் மரணமடைந்துள்ளதினால் மிகுதியாக உள்ள 53 சந்தேக நபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 திகதிகளில் மன்னார் மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த செவ்வாய் அன்று மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்ற கட்டிடம் மீதான தாக்குதல் மற்றும் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்பில் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரியவருவதாவது, மன்னார் நகரில் உள்ள உப்புக்குளம் கோந்தைப்பிட்டி பகுதியில் உப்புக்குளம் மீனவர்களுக்கான மீன்பிடி இறங்குதுறை ஒன்றுள்ளது.

குறித்த இறங்குதுறை கடந்த 90ஆம் ஆண்டு வரை மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களினால் பயன்படுத்தப்பட்ட நிலையில், 90ஆம் ஆண்டு நிகழ்ந்த யுத்த நடவடிக்கைகளினால் மன்னார் மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறிய நிலையில், குறித்த கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறை பாவனையின்றி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்குதுறைப் பகுதியில் நிலைகொண்டனர். அத்துடன் இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னரங்குகளும், பொலிஸாரின் முகாம்களும் கோந்தைப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் யுத்த நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து மன்னார் பகுதியில் வசித்த விடத்தல்தீவு மீனவர்களின் கடற்றொழில் பயன்பாட்டிற்காக குறித்த கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறையை வழங்குமாறு மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பிரகாரம் மன்னார் செயலக அதிகாரிகளாலும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளாலும் விடத்தல்தீவு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கோந்தைப்பிட்டி இறங்குதுறை தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தது.

இச்சூழ்நிலையில் சிறிது காலத்தின் பின்னர் மன்னார் உப்புக்குளம் பகுதியில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மீனவர்கள் மன்னார் நகரில் மீளக்குடியமர்ந்தனர். அத்துடன் மேற்படி கோந்தைப்பிட்டி இறங்குதுறையை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளிடம், அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனடிப்படையில் மன்னார் பிரதேச செயலக அதிகாரிகளும் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளும் விடத்தல்தீவு மீனவர்களுக்கு மாற்று இடமொன்றினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் அதிகாரிகளினால் வழங்கப்படும் மாற்று இடத்தில் தொழில் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த விடத்தல்தீவு மீனவர்கள் கோந்தைப்பிட்டி இறங்குதுறை கைவிட மறுத்தனர்.

இந்த நிலையில் இதனைக் கண்டித்தும் கோந்தைப்பிட்டி இறங்குதுறை தமக்கு மீண்டும் கையளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி காலை 10 மணியளவில் உப்புக்குளம் மீனவர்கள் மாபெரும் போராட்டமொன்றினை மேற்கொண்டனர்.

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள மன்னார் - மதவாச்சி ஏ -14 பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்பாட்டம் அன்றைய தினம் அமைதியாக நடைபெற்றவேளை வன்முறைக் கும்பல் ஒன்று மன்னார் மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது திடீர் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டது.

இத்தாக்குதலினால் நீதிமன்ற கட்டிடம் சேதம் அடைந்ததுடன் ஏனைய பொதுச் சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் பொது மக்கள் உட்பட பொலிஸாரும் இச்சம்பவத்தில் காயமடைந்தனர். பின்னர் பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டு ஆர்பாட்டக்காரர்களையும் வன்முறை கும்பலையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் படி உதவி பொலிஸ் அத்தியட்சகர்(ஏ எஸ் பி) ஒருவரின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அத்துடன் இது தொடர்பாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் மன்னார் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் இலங்கை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ( சீ ஐ டி) அச்சமயம் மன்னார் நகருக்கு வருகை தந்து குறித்த நீதிமன்ற கட்டிடம் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பில் மேலதிகப் புலன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

இச்சூழ்நிலையில் மன்னார் நீதிமன்றக் கட்டிடத்தொகுதி மீது தாக்குதல் நடத்தி அதனைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 55 பேர்கள் மேற்படி மூன்று பொலிஸ் குழுக்களினாலும் கைது செய்யப்பட்டனர்.

மன்னார் நீதிமன்றம் கட்டிடம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் விஷேட நீதவானாக நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய நிலையில் மன்னார் நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேற்படி மூன்று பொலிஸ் குழுக்களும் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சந்தேகத்தில் 55 நபர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் நீதிமன்றில் விஷேட நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் குறித்த வழக்கு விசாரணைகள் 2012 ஆண்டில் இருந்து பல தடவைகள் மன்னார் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் கடந்த 2013 ஆண்டு விரிவான விசாரணைகளுக்காக குறித்த வழக்கு சட்ட மா அதிபரால் மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

எச்.சீ/ எம்.என்/72/13 எனும் குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றில் தொடர்சியாக ஒன்பது வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மேல், முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவிந்திர மற்றும் சம்பவ தினம் மன்னார் நீதிமன்றில் சேவையாற்றிய சட்டத்தரணிகள் உட்பட 19 சாட்சிகள் குறித்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீதித்துறை வரலாற்றிலேயே முதன் முதலாக நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் மன்னாரில் பதிவாகியதினால் மன்னார் நீதிமன்றத் தாக்குதல் சம்பவம் முழு நாட்டையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.

மன்னார் நீதிமன்ற தாக்குதலை மேற்கொண்டவர்கள், றிஸாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்தவர்கள் எனச் செய்திகள் வெளிவந்த நிலையில் முன்னாள் அமைச்சர் றிஸாத் பதியூதீனும் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.