வடமாகாணம்

மாந்தை கிழக்கில் அரச காணிகள் குத்தகைக்கு விடப்படுவதாகக் குற்றச்சாட்டு

அரசியல் செல்வாக்கே காரணம் என்கிறார் பிரதேச சபைத் தவிசாளர்
பதிப்பு: 2022 ஜன. 19 21:57
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 23:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கையின் தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் உடைய வளமான அரச காணிகள் நீண்டகால அடிப்படையில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பிரதேச செயலாளரினால் குத்தகைக்கு வழங்கப்படுவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அரச காணிகள் மற்றும் உறுதிப் பத்திரங்கள் மூலம் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் தற்பொழுது அங்கு நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எமது கூர்மைச் செய்தி தளத்திற்கு பிரதேச சபைத் தவிசாளர் கருத்து தெரிவித்த நிலையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் கூர்மைத் தளத்திற்கு தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பல கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக வசிக்கும் சுமார் 800க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு, அவர்களின் பாரம்பரிய தொழிலான விவசாயத்தை முன்னெடுப்பதற்கு போதிய காணிகள் இல்லை.

இந்த நிலையில் மேற்படி விவசாய குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் மாந்தை கிழக்கு பகுதியில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமுடைய வளமான அரச காணிகள் செல்வாக்கு உள்ளவர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் பங்கீடு செய்யப்படுகின்றது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரினால் இவ்விதம் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் காணிகளைப் பெறுவோர், வேறு பகுதிகளில் நிரந்தரமாக வசிப்பவர்கள் எனும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அரச காணிகளை குத்தகைக்கு வழங்கும் போது மாவட்ட காணிப் பயன்பாட்டுக்கு குழுவினரின் அனுமதிகள் உரிய முறையில் பெறப்படுவதில்லை. மாந்தை கிழக்கு பிரதேச சபையில் நான் பிரதிநிதித்துவம் செய்யும் எனது வட்டாரத்தில் உள்ள அரச காணித்துண்டொன்று நீண்ட கால குத்தகை அடிப்படையில் பிரதேச செயலாளரினால் தனிநபருக்கு வழங்கப்பட்டது.

எனினும் வட்டார உறுப்பினரான எனக்கு கூட இது பற்றி அறிவிக்கப்படவில்லை. குத்தகைக்கு வழங்கப்பட்ட இக்காணி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களையும் என்னால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள விவசாயக் குளங்களை அடிப்படையாக கொண்டு, விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பொது மக்களுக்கு அரச காணிகள் அண்மையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. வன்னிவிலாங்குளம், துவரங்குளம் ஆகிய குளங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாய செய்கை களுக்காக பொதுமக்களுக்கு அரச காணிகள் இரண்டு ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்துடன் நீலவட்டியாகுளம் எனும் பகுதியிலும் 60 ஏக்கர் அரச காணிகள் துப்பரவு செய்யப்பட்டு 42 குடும்பங்களுக்கு அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது. எனினும் வழங்கப்பட்ட அரச காணியில் இன்றுவரை எவ்வித விவசாய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் விவசாய நோக்கத்திற்காக அரச காணிகளைப் பெற்றுக்கொண்ட வர்களுக்கு, அக்காணிகள் எங்குள்ளது, என்று கூட தெரியாது. இதனால் குறித்த காணிகளை பெற்றவர்களினால் அதனை அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது.

மேலும் முல்லை மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் வதியும் பொதுமக்கள் தினமும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் வாழ்பவர்கள் அனைவரும் இறுதி யுத்தத்திற்கும் முகம் கொடுத்தது தமது உறவுகளை யுத்தத்தில் பறிகொடுத்தவர்கள். அத்துடன் பெரும் சொத்தழிவுகளுக்கும் முகம் கொடுத்தவர்கள். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை வன பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியன மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகளில் எல்லைக் கற்களை நட்டியுள்ளனர்.

இவ்வாறான பொது மக்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. இந்த நிலையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் நிகழும் பல்வேறு மோசடிகள் மற்றும் அதிகாரிகளின் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் அடங்களாக அரச உயர் அதிகாரிகளுக்கும் தாம் மகஜர்களை அனுப்பிவைத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.