ராஜபக்சக்களுக்கு எதிராக

புதிய அரசியல் அணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரிகா

மைத்திரியிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றவும் முயற்சி
பதிப்பு: 2022 ஜன. 20 22:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 23:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியோடு இணைந்து அந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரின் மகளுமான சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரனதுங்க தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருக்கும் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிரதமராக்கி 52 நாட்கள் நடத்திய அரசியல் நாடகம் பெரும் சாபக்கேடு என்றும் கூறினார்.
 
தாம் உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டதாகவும் சந்திரிகா கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபடுவது போன்ற தொனியை வெளிப்படுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக விடுத்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன செவிசாய்க்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பது அல்லது புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாகக் கொழும்பில் முக்கிய அரசியல் பிரதிநிதிகளோடு கடந்த சில வாரங்களாக சந்திரிகா கலந்துரையாடி வருகின்றாரென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணையக்கூடிய வாய்ப்புகள் இல்லாதவொரு சூழலிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த இரண்டு கட்சிகளோடும் இணைய முடியாத நிலையிலும் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க முடியாது என்பது வெளிப்படை.

இந்தவொரு நிலையில் தற்போது அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு முரண்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் பலரையும், மற்றும் ரணில், சஜித் ஆகியோரின் இரு பிரதான எதிர்க்கட்சிகளில் உள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரையும் இணைத்தே புதிய அரசியல் அணியை உருவாக்க சந்திரிகா முற்படுவதாகக் கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சிகளிடையே தற்போது முரண்பாடுகள் உருவாகியுள்ள சூழலில், அரசாங்கத்துக்குள் இருந்து முரண்படும் சிறிய கட்சிகள் வெளியேறி எதிர்க் கட்சிகளோடு இணைய முடியாதவொரு பின்னணியிலேயே, சந்திரிகா புதிய அரசியல் அணியை உருவாக்குவது குறித்துக் கலந்துரையாடி வருகின்றாரென்பது குறிப்பிடத்தக்கது.