கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில்

பொத்தானை தொடக்கம் வாகனேரி வரையான காடுகளுக்குத் தீ மூட்டுவது யார்? அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு

தமிழர் பாரம்பரிய கிராமங்களின் அடையாளங்கள் மாற்றப்படுவதாகவும் விசனம்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 11 22:21
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 12 14:29
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காட்டுவளங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டுவதனால், காட்டில் உள்ள வளங்கள், உயிரினங்கள் அனைத்தும் அழிந்துபோவதாக பொத்தானை தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ச.தவநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் ஒன்று பொத்தானையாகும். கடந்த காலங்களில் தமிழர்கள் மாத்திரம் வாழ்ந்த பகுதியில் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், வேறு சமூகத்தவர்கள் தமிழர்களின் காணிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பலாத்காரமாகக் குடியேறி தமிழர் பாரம்பரிய பிரதேசங்களின் அடையாளங்களை மாற்றி வருவதாவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொத்தானை தொடக்கம் வாகனேரி வரையில் காட்டுவளத்திற்கு தீ மூட்டப்பட்டுள்ளது.

மீள்குடியேறிய தமிழ் பகுதியில் தற்காலிக கொட்டகைகளை அமைப்பதற்கு ஒரு பச்சைமரத்தை வெட்டினால் கூட நீதிமன்றில் வழக்கு வைக்கும் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இன்று நூற்றுக் கணக்காகன ஏக்கர் காணிகளில் உள்ள காட்டுவளங்கள் அழிக்கப்படுகின்ற போது, அதனை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அவா் குற்றம் சுமத்தினார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சட்டம், இனம், மதம், செல்வந்தர் என பாகுபாடு காட்டுவதாக தெரிவிக்கும் தவநாதன், இந்தக் கிராமம் போரினால் கடுமையாகப் பாதிக்கபட்டது எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக காட்டுத் தொழில செய்யும் போது அவர்களை கைது செய்கின்றனர். அதுமாத்திரமல்ல மீள்குடியேற்றத்திற்காக தமது சொந்த காணிகளை சுத்தம் செய்ய செல்லும் போதும் கைது செய்கின்றனர்.

ஆகவே, தற்போது பெருமளவு ஏக்கர் காடு தீயினால் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழர் வளங்கள் அழிவடைவதைத் தடுக்க வேண்டும் என தவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தளவாய்,புன்னைக்குடா பகுதியில் உள்ள காடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் கடந்த மாதம் 12 ஆம் திகதி தீவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.